நெடுவாசலில் 16-வது நாளாக தொடரும் போராட்டம்; ஸ்டாலின் நேரில் ஆதரவு

புதுக்கோட்டை நெடுவாசல் கிராம மக்களால் தொடங்கப்பட்டு 16 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையன்றும் தொடரும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லி சென்று நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான எந்தவித கோரிக்கையும் அதிகாரபூர்வமாக முன்வைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு அல்லது ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற விவகாரங்களை அரசியலாக்க திமுக விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் இது போன்ற விவகாரங்களை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே ஆதரவு தெரிவிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைத்துள்ள குற்றச்சட்டுகளுக்கும் பதிலளித்த மு.க.ஸ்டாலின், வைகோ தன் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடரும் மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்த்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று உறுதியளித்த மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் கோரிக்கையை ஏற்று விரைவாகா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரினார்.

Image caption இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜாவுடன் ஸ்டாலின்

இதற்கிடையே புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் இன்று பங்கேற்று ஆதரவை வெளிப்படுத்தினார்.

மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பப்போவதாகவும் தெரிவித்த டி.ராஜா, பாஜக அரசால் விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமில்லாமல், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்