டிடிவி.தினகரன் அனுப்பும் கடிதத்தை ஏற்க முடியாது: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

அதிமுக நிர்வாகியாக இல்லாத டி.டி.வி. தினகரன் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதங்களை ஏற்க முடியாது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை AIADMK

தற்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள என்று முகவரியில் குறிப்பிட்டு சசிகலாவின் பெயரில் அஞ்சல் ஒன்றை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

அதில், இந்த ஆண்டு பிப்ரவரி 2, 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதங்களுக்கு , பிப்ரவரி 2 மற்றும்,28 ஆம் தேதிகளில் மொத்தம் 5 வேறுபட்ட பதில் கடிதங்கள் டிடிவி தினகரனிடமிருந்து வந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டிடிவி தினகரன்

"தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகள்படி, தினகரன் அதிமுகவில் எந்தவொரு பொறுப்பையும் வகிக்காதவர். கட்சியின் எந்தவொரு தகவல் தொடர்பும் அதிகாரப்பூர்வ நிர்வாகியின் கையெழுத்திட்டு அனுப்பப்பட வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதத்தில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். அல்லது உங்கள் சார்பில் நீங்கள் அதிகாரப்பூர்வமாக யாரையாவது அங்கீகரித்தவராக இருக்க வேண்டும். அதனால், மார்ச் 10-ம் தேதிக்குள் உங்கள் பதில்கள் வந்தடைய வேண்டும்," என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா கடந்த மாதம் சிறைக்குச் செல்லும் முன்னதாக, டி.டி.வி. தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தினகரன் உள்பட சசிகலாவின் உறவினர்கள் சிலரை கட்சியிலிருந்து விலக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு, கடந்த மாதம், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதாக அறிவித்த சசிகலா, தான் சிறை செல்லும் முன்பு அவரை துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார்.

ஆனால், சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாது எனக்கூறி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதுதொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்