மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு; நடிகர் ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்

திமுகவில் புதிதாக இணைந்துள்ள நடிகர் ராதாரவி பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ மற்றும் ராமதாஸை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சுக்குக் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது.

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption சில தினங்களுக்குமுன் தான் திமுகவில் இணைந்தார் ராதா ரவி

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியும், தனது சமூகவலைத்தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், "ராதா ரவி மாற்றுத்திறனாளிகளை இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்." என்று அதில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Kanimozhi Karunanidhi
Image caption ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் : கனிமொழி

சென்னையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லம் முன்பாக கூடிய அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், ராதாரவிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகவலைத்தளங்களிலும் நடிகர் ராதாரவி பேசிய காணொளியும், அதற்கு பதியப்பட்ட கண்டனங்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளரான யெஸ்.பாலபாரதி, தனது சமூகவலைத்தள பக்கத்தில் நடிகர் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அதில், "நடிகர் ராதாரவி, சமீபத்தில் மீண்டும் இணைந்த திமுக மேடையில் சிறப்புக்குழந்தைகளை கேலியும், கிண்டலுமாக அறுவெறுக்கத்த வகையில் பேசுகிறார். பேச்சின் போது, மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை பெரியவர்களும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். பேச்சின் கடைசியில் ராமதாஸ், வைகோ ஆகிய இருவரையும் அப்படிச்சொன்னதாகச்சொல்லி பேச்சை முடிக்கிறார். உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் யாரையும் திட்டுங்கள். ஆனால், தினம் தினம் போராடிக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஏன் இழிவு படுத்துகிறீர்கள்." என யெஸ்.பாலபாரதி குறிப்பிட்டுள்ளார்.   

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்