பதின்ம வயதினருக்கு பாலியல் குறித்து பக்குவமாகச் சொல்லும் இந்திய அரசின் கையேடு தயார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பதின்ம வயதினரின் நலத்தை குறிவைக்கும் கையேடு

பதின்ம வயதினரின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் அடங்கிய இந்திய அரசாங்கத்தின் கையேடு, பாலியல் குறித்து முற்போக்கான கருத்துக்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளதால், பாராட்டைப் பெற்றுள்ளது.

ஐ.நா. மக்கள் தொகை நிதியத்துடன் இணைந்து, தேசிய சுகாதார இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த தொகுப்பானது, இளம் பருவத்தை எட்டும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் மேம்பாடு குறித்த பிரச்சனைகளை விவாதிக்கும் நோக்கில் இளம் கல்வியாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கையேடு ஒருபாலுறவு மீதான ஈர்ப்பில் ஆரம்பித்து பாலியல் வன்கொடுமை மற்றும் மனநல ஆரோக்கியம் வரை விவாதிக்கிறது.

இதுபோன்ற அம்சங்கள், பொதுப்படையாக விவாதிக்கப்படாத, இலைமறை காய் விஷயங்களாகவே பார்க்கப்படுகிறது.

விரைவில் இளம் கல்வியாளர்களை உருவாக்கும் இந்த திட்டமானது இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தலைப்புகளை பார்ப்போம்.

ஒரு பாலுறவு ஈர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒரு பாலுறவு ஈர்ப்பு

''இளம் பருவத்தினர் அடிக்கடி காதலில் விழுவது உண்மைத்தான். ஒரு நண்பனுக்காகவோ அல்லது ஒரு நபருக்காகவோ அவர்கள் ஓர் இணைப்பை உணர்வார்கள். அந்த நபர்கள் எதிரெதிர் பாலினமாகவோ அல்லது ஒரே பாலினமாகவோ இருக்கலாம். பிறருக்காக இப்படி ஓர் உணர்வு நமக்குள் எழுவது எதர்த்தமான ஒன்றுதான்'' என்று அதன் கல்வியாளர்களுக்கு மிக எளிமையாக சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஆனால், இந்தியாவில் ஒருபாலுறவுக்கு எதிரான சட்ட நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கிறது. ஒருபாலுறவு தொடர்புகள் நாட்டில் குற்றவியல் தண்டனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 10 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஒருபாலுறவானது இயற்கைக்கு மாறானதாக கருதப்படுகிறது. ஒருபாலுறவுகாரர்கள் சமூகத்தில் அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறார்கள்.

மாதவிடாய் சுழற்சி

படத்தின் காப்புரிமை AFP
Image caption மாதவிடாய் காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதியில்லை

இந்தியாவில் மாதவிடாய் என்பது பரவலாக சுகாதாரமற்றதாக பார்க்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பல வழிபாட்டுத் தலங்களிலும், சில நேரங்களில் சொந்த வீட்டின் சமையல் அறையில் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தகவல் தொகுப்பானது மாதவிடாய் என்றால் என்ன என்பதை விளக்குகிறது. மேலும், ''பருவ வயது பெண்கள் மாதவிடாய் குறித்து அசிங்கப்படவோ அல்லது குற்ற உணர்ச்சியோ பட கூடாது. இதுப்போன்ற காலங்களில் சற்று கவனத்துடன், கூடுதல் ஊட்டச்சத்துடந் அன்றாட பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் '' என்கிறது இந்த கையேடு.

ஆண்கள் அழக்கூடாது

படத்தின் காப்புரிமை AFP
Image caption `ஆண் பிள்ளைகள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட கூடாது'

இந்த புத்தகத்தில் மற்றொரு பிரச்சனையான ஆண்மை குறித்து கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும் ஒரு சமூகத்தில், ஆண் பிள்ளைகள் தங்களுடைய மென்மையான சுபாவங்களை காட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறு வயது முதலே, ஆண் பிள்ளைகள் அழக்கூடாது அல்லது உணர்ச்சிகளை வெளிக்காட்ட கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படுகின்றனர்.

ஆண்கள் எல்லாம் வலிமையானவர்கள் மற்றும் பலம் பொருந்தியவர்கள் என்றும், பெண்கள் மென்மையான பேசுபவர்கள் மற்றும் சாதுவாக இருப்பவர்கள் என்றும் பாலினம் குறித்த முத்திரை குத்தப்படுகிறது.

சிறுவன் அல்லது ஆண்மகன் அழுகை மூலம் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதும், வெட்கப்பட்டு மென்மையாக பேசுவதும் சாதாரண விஷயங்கள் என்று இந்த கையேடு கூறுகிறது.

அதேபோல், பெண் பிள்ளை தைரியமாக பேசுவது அல்லது ஆண் பிள்ளைகளை போல சட்டை அணிவது மற்றும் ஆண்களுக்கு மட்டுமே என பொதுவாக அடையாளம் கொண்டுள்ள விளையாட்டுகளை விளையாடுவது தவறில்லை என்று இந்த கையேடு கூறுகிறது.

பெண் பிள்ளைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துகிறது

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெண் பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டில் இருக்க வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்

இந்தியாவில் உள்ள பல பெற்றோர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள், பூப்பெய்திய பிறகு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளியில் சென்று விளையாடவோ அனுமதிப்பதில்லை.

இதுபோன்ற சூழலில், பெண் பிள்ளைகள் வீட்டிற்குள் இருக்கவும், விளையாட்டுகளுக்கு பதிலாக வீட்டு வேலைகளை செய்யவுமே எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலில் பாதுகாப்பு, அடுத்து எதிரெதிர் பாலினத்தவர்கள் சேரும் போது முறையற்ற உறவுகளில் முடியும் என்ற அச்சம் மற்றும் பெண்கள் மிகவும் தைரியமானவர்கள் என்ற கருத்துக்களும் காரணம்.

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து இந்த கையேடு பல விஷயங்களை பேசுகிறது.

அதிலும், ஆண் பிள்ளைகளை குறித்து ஒரு பகுதியில், ''சமூகத்தில் பொறுப்பான உறுப்பினர்கள் என்ற முறையில், நாம் பெண்கள் கேலி செய்யப்படாமல் இருப்பதையும், உடல் ரீதியாகவோ அல்லது வார்த்தையின் மூலமோ துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்'' என்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்