தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி

  • 5 மார்ச் 2017

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதற்கு, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Image caption தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதற்கு, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (வாட்) யில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாகவே இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 27 சதவீதமாக இருந்த பெட்ரோல் மீதான அந்த வரி, தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் மீதான அந்த வரி 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.78 காசுகளும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.76 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

பொது மக்களை பாதிக்கும் வாட் வரி அதிகரிப்பு

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பெட்ரோல் பங்க் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் முரளி, ''இந்த வாட் வரி அதிகரிப்பு நிச்சயம் பொது மக்களை பாதிக்கும். இந்த அதிகரிப்பு எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. டீலர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் இது அதிர்ச்சியளிக்கும் விலை உயர்வுதான்'' என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ''பெட்ரோல் மீதான வாட் வரி, தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் மீதான அந்த வரி 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்'' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மறு பரிசீலனை செய்யவோ அல்லது வாட் வரியை அறவே நீக்கவோ தமிழக அரசை தாங்கள் கேட்டுக் கொள்ளப் போவதாக முரளி மேலும் கூறினார்.

கூடுதல் வாட் வரியால் முழு பலனும் தமிழக அரசுக்கே செல்லும் என்றும், இதனால் பெட்ரோல் பங்குகளோ அல்லது வேறு யாருமோ லாபம் அடையப் போவதில்லை என்று தெரிவித்த முரளி, வாட் வரி அதிகரிப்பு குறித்து தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை எதுவும் தங்களுக்கு வரவில்லையென்றும், எண்ணெய் நிறுவனங்கள் மூலம் இன்று (ஞாயிறுக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு அமல்படுத்தப்படுகிறது என்ற தகவல் தங்களுக்கு குறுந்தகவல் மூலம் வந்ததாக அவர் தெரிவித்தார்.

Image caption பொது மக்களை பாதிக்கும் வாட் வரி அதிகரிப்பு

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய தமிழக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுகுமார், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (வாட்) மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றம், விலைவாசியை பாதிக்கும் என்றும், அதனால் ஏற்படும் சுமைகளையும் பொது மக்களே சுமக்க நேரிடும் என சுகுமார் குறிப்பிட்டார்.

பால் விலை உயருமா?

இதற்கிடையே நாளை முதல் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்போவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அத்தோடு தயிர் விலையும் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில், இது போன்ற விலை ஏற்றம் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதே பொது மக்களின் கவலையாக வெளிப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்