ஓ.பி.எஸ்ஸுக்கு தெரியாமல் ஜெயலலிதாவுக்கு எந்த சிகிச்சையும் தரவில்லை: அமைச்சரின் புதிய தகவல்

  • 5 மார்ச் 2017

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வதுக்கு முழுமையாகத் தெரியும் என்று தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES

இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த உண்மை முழுவதையும் உடனிருந்து நன்கு அறிந்திருந்த போதிலும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சேபத்துக்குரிய முறையில் அபத்தமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்'' என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தனது அறிக்கையில் அவர் கூறியதாவது, ''அரசியல் ஆதாயம் பெறவே ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறான கருத்துக்களை மக்களின் மனதில் விதைக்க முயற்சிக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை

அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது என்றும், தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள், வேலூர் சிஎம்சி மருத்துவர்கள், மும்பை டாடா நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், பெங்களூரு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் புகழ்பெற்ற இதய மருத்துவர்களும், லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் ஆகியோர் நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்று விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழு

மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 5 மருத்துவர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது என்று விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image caption ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது

தமிழக அரசின் தலமைச் செயலாளர், அரசு ஆலோசகர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு இந்த குழு தினமும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளித்தது. இதில் ஓ. பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல் நபராக ஓ. பன்னீர்செல்வம் விசாரிக்கப்படுவார்

மேலும், விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிக்கிச்சைகள் குறித்து விசாரணை நடத்த தற்போது கேட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், அவ்வாறு விசாரணை வந்தால், முதல் நபராக அவர்தான் விசாரிக்கப்படுவார் என்பதை உணர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

''கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியன்றே, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரமும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டது. அவருக்கு தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படவில்லை'' என விஜயபாஸ்கர் மேலும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்தவொரு சந்தேகமும் இல்லை என கடந்த பிப்ரவரியில் ஓ. பன்னீர்செல்வம் கூறினார் என்று விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓபிஎஸ் மீது விஜயபாஸ்கர் தாக்கு

மேலும், மாநில ஆளுநர்கள், அண்டை மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த போது , பிரதாப் ரெட்டி தலைமையிலான மருத்துவர்கள் குழு அவர்களுக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளித்த போது, ஓ. பன்னீர்செல்வமும் உடனிருந்தார் என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்தார்.

'மாற்றி பேசுகிறார் ஓபிஎஸ்'

''பதவியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சு என்று ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் தனது அறிக்கையில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்