இந்தியா "நரபலி": 10 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக கைது நடவடிக்கை

  • 6 மார்ச் 2017

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பத்து வயது சிறுமி "நரபலி" கொடுக்கப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Karnataka police
Image caption சிறுமியை கடத்த உதவிய 17 வயது சிறுவனும் கைது

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துவதற்காக மந்திரவாதி ஒருவர் சொன்னதைக் கேட்டு சிறுமி கொல்லப்பட்டதாக, காவல்துறை பி.பி.சியிடம் தெரிவித்தது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் சகோதரனும், சகோதரியும், சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

“மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் சகோதரனை குணப்படுத்த ஒரே வழி நரபலி கொடுப்பதுதான்” என்று அந்த மந்திரவாதி அவர்களிடம் கூறியிருக்கிறார்.

சிறுமியை கடத்த உதவிய 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்த குற்றத்திற்கு உடந்தையாக மேலும் சிலர் இருந்துள்ளனர். பலவித கோணங்களில் இருந்தும் இந்த சம்பவத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எனவே மேலும் பல கைதுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன" என காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலம் மற்றும் மாந்திரீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் கண்டுபிடித்ததை அடுத்து, இந்த கொலை வெளிவந்துள்ளது.

நரபலி தொடர்பான செய்திகள் பரவியதும், சம்பந்தப்பட்ட சகோதரன் மற்றும் சகோதரரின் வீட்டின் வெளியே கூடிய கும்பல், கற்களை வீசியெறிந்து, கோபத்தை காட்டியது. கும்பலை கலைக்க காவல்துறையினர் பலப்பிரயோகம் நடத்த வேண்டியிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்