கட்டடத்துக்குள் பதுங்கியிருக்கும் ஆயுததாரியை உயிருடன் பிடிக்க போலீசார் சுற்றிவளைப்பு

சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியொருவரை பிடிப்பதற்காக உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை,லக்னெளவில் நடத்திவரும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 6 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் தேடுதல் வேட்டை

செவ்வாய்க்கிழமை நண்பகலில், உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னெளவில் உள்ள தாக்கூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியொருவரை கைது செய்ய போலீசார் சென்ற போது, பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சூழலில், இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பேச்சாளர் ராகுல் ஸ்ரீவத்சவா கூறுகையில், ''சந்தேகிக்கப்படும் தீவிரவாத நபர்கள் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அல்லாத ஒரு வெளி முகமை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை VIVEK TRIPATHI

மேலும், அவர் கூறுகையில், '' ஃ பைஜான் மற்றும் இம்ரான் என்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று கான்பூரில் நடைபெற்ற வேறொரு தீவிரவாத தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.

லக்னெளவின் தாக்கூர்கஞ்ச் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக குறிப்பிட்ட ராகுல் ஸ்ரீவத்சாவா , ''சைஃபுல் என்ற பெயருடைய சந்தேக நபர் ஒருவர் கட்டடத்துக்குள் பதுங்கியிருக்கிறார். அவரை உயிருடன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

"அந்த இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருக்கலாம். ஆனால், அதனை தற்போது உறுதிப்படுத்த இயலாது'' என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்