போராட்டங்களில் அதிகரிக்கும் தமிழக பெண்களின் பங்களிப்பு: மாற்றத்தை நோக்கிய பயணமா?

  • 8 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண் கல்வி என பேசிய நிலையை கடந்து சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு பெண்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் ஆரோக்கியமான நிலையை, தமிழ்நாட்டில் சமீப காலங்களில் நிலவும் அரசியல் சூழல் உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.

இதற்கான காரணம் என்ன? இது எதை நோக்கிய முன்னேற்றம்? வருங்காலத்தில் இது பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்குமா, என்பது குறித்த ஒரு தொகுப்புதான் இது.

சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது; குறிப்பாக போராட்டம் என்றால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என்றுதான் நாம் காண முடியும் ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என சம அளவில் பங்கு கொண்டதை நாம் காண முடிந்தது.

போராட்டக் களம் என்றால் அது பெண்களுக்கு ஏற்றதா? பெண்கள் போராட்டங்களில் ஈடுபடலாமா? அவர்களுக்கு பாதுகாப்பு அங்கு இருக்குமா? என்று எழும் பல கேள்விகளை தகர்த்தெறிந்து, பெண்கள் போராட்டத்தில் இறங்கினால் அதன் மொத்த வடிவமே மாறும் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜல்லிக்கட்டை அடுத்து, நெடுவாசலில் கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பு பெண்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பங்களின் ஆதரவு

இந்த போராட்டக்களங்களில் பெண்கள் தனிநபர்களாக மட்டும் போராடாமல் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு உரிமைக் குரல் எழுப்புவதையும் நம்மால் காண முடிகிறது.

பெண்கள் சாதிப்பதற்கு குடும்பம் என்ற அமைப்பு உறுதுணையாக இருக்கும்பட்சத்தில் அது பெரும் பலமாகவே உருவெடுக்கிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட குடும்பத்தலைவி கயல்விழியிடம் கேட்ட போது, தனது குடும்பம் இதற்கு உறுதியாக இருந்ததாகவும், போராட்டம் நடந்த ஏழு நாட்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தில் இருப்பது போல போரட்டக்களத்திலும் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இனி வரும் காலங்களிலும் போராட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்ளப்போவதாகவும் நம்மிடம் தெரிவித்தார் கயல்விழி.

பொதுவாக பெண்கள் பாதுகாப்பு குறித்து எழும் பல கேள்விகளே இதுவரை பெரும்பாலும் போராட்டக்களத்தில் இருந்து பெண்களை விலக்கி வைத்திருந்த நிலையில், சமீபத்திய போராட்டங்கள் அவ்வித பிம்பத்தையும் தகர்த்தது என்றே கூற வேண்டும்.

"போராட்டக்களத்தில் வெற்றி காணும் வரை போராட வேண்டும்"

போராட்டங்களில் தங்கள் குரல்களை மட்டுமே பதிய வைக்க முயற்சிக்காமல், போராட்டத்திற்கான காரணம், அதன் பின்னணி, அதற்கான நிரந்தர தீர்வு குறித்த அறிவு என பெரிய தெளிவுடனே இளம் சமூகத்து பெண்கள் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட வினோதினியிடம் பேசிய போது நம்மால் உணர முடிந்தது.

"நான் மருத்துவ துறையில் இருப்பதால் நாட்டு மாட்டு பாலின் நன்மை எனக்கு தெரிந்திருந்தது; என்னை போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு எனது தந்தை மிகவும் ஊக்கமளித்தார்; ஏழாம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போது என்னை விட எனது தந்தை தைரியமாக இருந்தார், போராட்டக்களத்தில் வெற்றி காணும் வரை போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்" என நெகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவிக்கிறார் வினோதினி.

அண்மைச் செய்திகள் பற்றிய ஆர்வமும் புரிதலும்

இளம் சமூகத்தினரை ஒன்று சேர்த்த இந்த போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டதால் அண்மை தகவல்கள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் தகவல் தொழில்நுட்ப ஊழியர் பவித்ரா.

"தங்களது பணிகளையெல்லாம் விடுத்து, நல்ல நோக்கம் ஒன்றிற்காக அனைவரும் போராடிக் கொண்டிருந்த தருணத்தில், நான் ஏன் பங்கு கொள்ள கூடாது, நானும் அதில் ஒர் அங்கமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது; அண்மை செய்திகள் பற்றிய ஆர்வமும் புரிதலும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறார்

இந்நிலையில் போராட்டங்களில் பெண்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டதற்கான காரணம் குறித்தும், எதிர்கால மாற்றம் குறித்தும், இவ்வாறு பெண்கள் தன்னெழுச்சியாக வெளியில் வந்து போராட்டங்களில் ஈடுபடும் போது, சமூக ஊடக தாக்குதல்களும் ஒரு புறம் அதிகரித்து வருவது குறித்தும் எழுத்தாளர் தமயந்தியிடம் கேட்டபோது,

Image caption எழுத்தாளர் தமயந்தி

"பெண்கள் போராடுவது என்பது தமிழ் சமுதாயத்தில் ஒளவையார் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது, போராட்டக் குரல் கொண்ட பெண்களை அடையாளம் கண்டு கொள்வதில் ஆண் கட்டமைப்பு கொண்ட சமூகம் தவறிவிட்டது" என்று கூறுகிறார் தமயந்தி.

"சமூக ஊடகம் தாக்குதல்கள் குறித்து தெரிவித்த அவர், நவீன சிக்கல்களை சரி செய்யக்கூடிய சட்டங்கள் இல்லை, வாழ்வியல் சிக்கல்களுக்கு ஏற்றவாறு நவீன சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் மேலும் பாலினம் சார்ந்த அரசியலை பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே புகட்ட வேண்டும் அப்போதுதான் சமூக மாற்றங்கள் நிகழும்" என்று தெரிவித்தார்.

"பெண்களோடு ஆண்களும் சேர்ந்து போராடுவதே சமூக முன்னேற்றத்திற்கான கட்டமைப்பாக அமையும் இந்த போராட்டத்தின் அடுத்த களமாக அரசியல் மாற்றங்களில் இம்மாதிரியான எழுச்சி வரவேண்டும்" என்றும் தெரிவிக்கிறார் தமயந்தி

அரசியலில் சாதிக்கும் நேரம் மிக அருகில்

இன்று பல துறைகளில் பெண்கள் சரிசமமாக சாதித்துள்ள போதிலும், அரசியல் துறையில் அவர்களின் பங்கீடு என்பது இன்றளவும் மிகவும் சொற்பமாகவே உள்ளது எனவே இம்மாதிரியான போராட்டங்கள் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்குமா என்பது குறித்து, ஆர்வலர் மற்றும் அரசியல் பிரமுகர் ஜோதிமணியிடம் கேட்ட போது,

"போராட்டக் குணம் என்பது பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒன்றுதான். களத்தில் வந்து பெண்கள் போராடுவதால் பெண்கள் பற்றிய பார்வைகளும் ஆண்கள் மத்தியில் மாறக்கூடும்; பெண்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டங்கள் இருக்கும் பட்சத்திலும், சம பாலினமாகவோ சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற சூழலோ இல்லை; எனவே இம்மாதிரியான சூழலில் பெருந்திரளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது பெண்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சம உரிமையற்ற தன்மையும் அவர்களால் வென்றெடுக்க முடியும்.

பெண்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் தான் குறைவாக உள்ளது என்றும் வாய்ப்புகள் இருக்கும் இடங்களில் பெண்கள் தாமாக வந்து போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கிறார் ஜோதிமணி.

படத்தின் காப்புரிமை Jothimani Sennimalai

பெண்கள் மற்ற துறைகளில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அரசியலில் சாதிப்பது என்பது விரைவில் நிகழும் என்றும் தெரிவிக்கிறார் ஜோதிமணி.

சமூக ஊடகங்களில் பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை தன் மீதும் அப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றது என்றும், தான் அதை பொது வெளியில் எதிர் கொள்ள முடிவெடுத்தாகவும் எனவே பெண்கள் இதை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும் அப்படி எதிர்கொள்ளும் பெண்களுக்கு சமூகம் நிச்சயம் ஆதரவளிக்கும்" என்றும் தெரிவித்தார் ஜோதிமணி.

பெண்கள் போராட்டக்களத்தில் ஆர்வமுடன் பங்கேற்பது சமூகத்தில் தங்களின் கருத்துக்களை உரத்த குரலில் பதியச் செய்வது, அதன் விளைவாக அரசியல் மாற்றங்ளை நிகழ்த்தும் என்பது ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை நோக்கிய நல்லதொரு மாற்றமாகவே அமையும்.

தொடர்புடைய தலைப்புகள்