ஆட்சியமைக்க மாயாவதியுடன் கூட்டணியா? அகிலேஷ் யாதவ் பேட்டி

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA
Image caption ராகுல் காந்தியுடன் தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, சனிக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், தேவைப்பட்டால், மாயாவதியின் பகுஜன் சமாஜ கட்சியுடன் கை கோர்க்கத் தயாராக இருப்பதாக, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிபிசி ஹிந்தி சேவைக்கு அளித்த பேட்டியில், அகிலேஷ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில், சமாஜவாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மாயாவதி கட்சி தனியாகவும், பாரதீய ஜனதா தனியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டபோது, இப்போது அதற்கான அவசியம் எழவில்லை என்று அகிலேஷ் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption மாயாவதி

"மாயாவதியை நான் எப்போதும் மரியாதையுடன் பார்க்கிறேன். தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி அமைக்க மாயாவதியின் உதவியை நான் கேட்பேன் என்றும், அல்லது மாயாவதிக்கு ஆதரவளிப்பேன் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இப்போது அந்தக் கேள்வி எழவில்லை. காங்கிரஸும் சமாஜவாதியும் போதிய இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் அகிலேஷ் யாதவ்.

இருந்தபோதிலும் கூட்டணி ஆட்சி தொடர்பாக நீங்கள் இன்னும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது, "காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணிக்கு விவசாயிகள், மகளிர் மற்றும் இளைஞர்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு ஆதரவில்லை. எனினும், தேர்தல் முடிவுகளுக்கப் பிறகே தெளிவான நிலை தெரியும்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,"சமாஜவாதி காங்கிரஸ் கூட்டணி ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆம். ஒரு வேளை ஆட்சியமைக்க தேவைப்பட்டால், யாரும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை விரும்ப மாட்டார்கள். ரிமோட் கன்ட்ரோல் மூலம் உத்தரப் பிரதேசத்தை பாரதீய ஜனதா கட்சி ஆள்வதை யாரும் விரும்ப மாட்டார்கள்" என்றார்.

இதன் மூலம், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், மாயாவதியுடன் கை கோர்க்கத் தயங்க மாட்டோம் என்பதை அகிலேஷ் யாதவ் மறைமுகமாக உணர்த்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்