தவறு செய்துவிட்டு தலித் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தலாமா? நீதிபதி சந்துரு காட்டம்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் செயல்பாடுகளின் விளைவாக, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகள் குழுவைக் கொண்ட கொலிஜியம் முறையை மாற்றி புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை kizhakku pathippagam
Image caption நீதிபதி சந்துரு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்க மாநில காவல் துறைத் தலைவர் அந்த வாரண்டை கர்ணனிடம் அளித்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31-ஆம் தேதி ஆஜராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

பதவியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

ஆனால், தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கர்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், "ஒரு நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்கவில்லை என்றால், பிடியாணைதான் பிறப்பிப்பார்கள். இந்த சூழ்நிலையை உருவாக்கியது நீதிபதி கர்ணன்தான். இவர் இல்லாத பிரச்சனையை உருவாக்கிய பிறகு, இப்போது நீதிமன்ற அறிக்கை கொடுத்த பிறகும் போகாமல் இருந்தால், அழைத்து வராவிட்டால் இழுத்துவர வேண்டிய வேலைதான் செய்ய வேண்டும்.

தான் ஒரு தலித் என்பதால் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என கர்ணன் பேட்டியளித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "அவருக்கு உண்மையிலேயே மன வியாதி இருக்கிறதா என்று தெரியவில்லை. நீதிபதி என்ற வரையறையைத் தாண்டி, வீதியில் போராடுபவரைப் போல் இருக்கிறார். உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மேலேயே நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வது உச்சகட்ட மனப்பிறழ்வில் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது," என்றார் சந்துரு.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்ச நீதிமன்றம்

"நீதிபதி கர்ணனின் இந்தத் தெருவிளையாட்டு தெளிவுபடுத்துவது என்னவென்றால், கொலிஜியம் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது" என்றார்.

"உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் பரிந்துரைத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவர் அதை ஆதரித்து, அதன்பிறகு, உள்துறை அமைச்கம் விசாரணை நடத்தி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவர் அந்த நியமனத்துக்கு அனுமதியளிக்கிறார். அதிலும் இதுபோல இமாயலத் தவறுகள் ஏற்படுகிறது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொலிஜியம் நடைமுறையை மாற்ற நாடாளுமன்றம் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார் நீதிபதி சந்துரு.

"தவறு செய்துவிட்டு, தலித் என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவது அநாகரிகமான முறை. அவர் தலித் என்பதால் யாரும் பழிவாங்கவில்லை. அவர் மீது மூன்று மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர். பணியிலிருக்கும் 21 நீதிபதிகள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். நீதிபதியின் மனைவி ஒருவரும் புகார் அளித்துள்ளார். தலித் பிறப்புக்கும் செய்யும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் மேலும் கீழ்த்தரமான செயல்களைச் செய்து, அந்த வகுப்பை பிரசாரத்துக்கு பயன்படுத்தும்போது, அந்த சமூகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயலை இவர்தான் செய்கிறார்," என்றார் நீதிபதி சந்துரு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்