செம்மரக் கடத்தல்: ஆந்திராவில் மேலும் 35 தமிழர்கள் கைது

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள லங்கமல்லேஸ்வரா வனவிலங்கு சரணாலய காட்டுப் பகுதியில் செம்மரம் வெட்டவந்ததாக இன்றும் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கடப்பா மாவட்டத்தின் கழிபேட்டுக்கு அருகில் உள்ள லங்கமல்லேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து புதன்கிழமை இரவிலிருந்து ஆந்திர மாநிலத்தின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்களிடமிருந்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 307 செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றதில் இன்றும் 35 பேர் கைது செய்யப்பட்டதாக தலைமை வனக் காவலர் மூர்த்தி இன்று மாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு எஸ்யுவி ரக வாகனங்களும் மரங்களைக் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு லாரியும் பிடிபட்டது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மூர்த்தி, மரம் வெட்ட வருபவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்து கைதுசெய்வதில்லையென்று குறிப்பிட்டார்.

2014-15 காலகட்டத்தில் செம்மரக் கடத்தல் தொடர்பாக 380 வழக்குகளும் 2016ல் 155 வழக்குகளும் 2017ல் 101 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டதாக மூர்த்தி குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில், தமிழக தொழிலாளர்கள் ஈடுபடுவதைத் தடுக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமென்றும் இதன் பின்னணியில் மூளையாகச் செயல்படுபவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் சேஷாச்சலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் செம்மரக்கடத்தல்காரர்கள் என ஆந்திர அரசு கூறியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்