கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து கோவை - பாலக்காடு சாலையில் மறியல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: கோவை - பாலக்காடு சாலையில் மறியல்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து, கோவை - பாலக்காடு சாலையில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் சாலை மறியல் போராட்டம்நடத்தி வருகின்றனர்.

Image caption கேரள எல்லைப்பகுதியிலுள்ள கோவை - பாலக்காடு சாலையை ஒரு நாள் முழுவதும் மறித்து போராட்டம்

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டியிலும் தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Image caption கேரளா கட்டுகின்ற இந்த தடுப்பணைகளால் தமிழகத்தில் குடிநீர் தட்டு்பபாடும், விவசாய தொழில் பாதிப்பும் ஏற்படும்

இதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் பிரதான கோவை - பாலாக்காடு சாலையில் உள்ள எட்டிமடை பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கம் உள்ளிட்ட சுமார் 40 அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

கேரள எல்லைப்பகுதியிலுள்ள இந்த சாலையை ஒரு நாள் முழுவதும் மறித்து போராட்டம் நடத்த போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Image caption பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்ட கேரளா மாநிலம் திட்டமிட்டுள்ளது

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

தடுப்பணைகள் கட்டப்பட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் கூறிய அவர்கள், தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுவதால், மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்