மீனவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம்: மடிவலை மீன்பிடி பிரச்சினைக்கு முடிவு ஏற்படுத்துமா?

இலங்கையில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 2 வருட சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிப்பதற்கான சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு வருவதன் மூலம் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற மடிவலை மீன்பிடி பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Image caption மீனவர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு

வட மாகாண மீனவர் கூட்டமைப்பின் தலைவர் மொகமட் ஆலம் தலைமையில் வவுனியாவில் கூடிய வட மாகாண மீனவர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மடிவலை மீன்பிடி காரணமாக வட மாகாணக் கடல் வளம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடி வருகின்ற வட மாகாண மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடல் வளத்திற்கு அழிவை ஏற்படுததுகின்ற வகையில் இந்த முறையைப் பயன்படுத்துகின்ற மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை, தனி நபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

Image caption மீனவர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு

அந்தப் பிரேரணையை அரசாங்கத் தரப்பினர் ஏற்று, அதனை அரச தரப்புப் பிரேரணையாக மாற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் அது சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரவுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தத் தனிநபர் பிரேரணை வரைவில் 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்ததில் மாற்றம் செய்து இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிப்பதற்கு அரசாங்கத் தரப்பினால் பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

Image caption மீனவர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு

இந்தப் பிரேரணை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் போது, சட்டத்தை மீறி மடிவலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதன் மூலம் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காண வழிபிறக்கும் என சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுக்கள் நடத்தியுள்ளதுடன், இலங்கை இந்திய அரசுகள் மட்டத்திலும் பேச்சுக்கள் நடத்தியதில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தப் புதிய சட்டம் அந்த முன்னேற்றத்திற்கு மேலும் வலுவூட்டும் என்று வட பகுதி மீனவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்