பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம்; தமிழகம், புதுவையில் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து மீனவ அமைப்பினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவரான பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மீனவ அமைப்பினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது போன்ற நிலை மீண்டும் இன்னொரு மீனவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற கோரிக்கையை முன்வைக்கும் மீனவ அமைப்பினர், சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ அமைப்பினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Image caption புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

குறிப்பாக புதுவையை சேர்ந்த மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி அமைத்தும் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவர்கள், மோதி அரசாங்கம், முறையான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்காக தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் போராட்டடக்குழுவினரிடம், அப்போராட்டத்தை கைவிடவேண்டும் என்றும் மத்திய அமைச்சர்கள் கோரினர்.

போராட்டக்குழுவினர் முன்பாக உரையாற்றிய நிர்மலா சீதாராமன், மீனவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு, மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு நல்லடக்கம் செய்ய முன்வர வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கோரினார்.

தொடர்ந்து மீனவ அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரிட்ஜோவின் உடல் இன்று திங்கள்கிழமை அடக்கம் செய்யப்படும் என மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்