முத்துகிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரும் அரசியல் கட்சிகள்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

படத்தின் காப்புரிமை FACEBOOK

சில நாட்களாக சொந்தப் பிரச்சனைகளின் காரணமாக அவர் சோர்வுடன் இருந்ததாக தில்லி காவல்துறை ஆணையர் கூறியிருப்பதை ஏற்க முடியாது எனக் கூறியிருக்கும் தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்துப் போராடியவர் முத்துகிருஷ்ணன் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் கடந்த ஜூலை மாதத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக முதலில் கூறப்பட்டு, பிறகு அது கொலைவழக்காக மாற்றப்பட்டதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சரவணன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மரணங்கள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குப் படிக்கச்செல்லும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இந்த இரு மரணங்களையும் சிபிஐ விசாரிக்க வேணடுமென்றும் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் பேச வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சாதிய பாகுபாடுகள் தீவிரமடைந்து வருவதால்தான் முத்துக்கிருஷ்ணன் மரணமடைந்திருப்பதாகவும் இவரது மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தருக்கிறது. மேலும், பாரதிய ஜனதாவின் மத்திய அரசு கருத்துரிமைக்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடுவோரை பாதுகாத்து வருகிறது என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த மரணம் குறித்து மத்திய அரசும் தில்லி மாநில அரசும் விசாரணை நடத்த வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கோரியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை

தற்கொலை செய்ய என் மகன் கோழை அல்ல: முத்துகிருஷ்ணன் தந்தை புகார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்