தீவிரமடையும் டெங்கு: கிண்ணியாவில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை தொடங்கி அனைத்து பள்ளிகளும் மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிக் கூட ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரவிலும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை பள்ளிக் கூடங்களை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பதாக கிண்ணியா பகுதிக்கான கல்வி அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனங்கள் , பாலர் பாடசாலைகள் மற்றும் மதரஸாக்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த பிரதேசத்தில் இரு வாரகாலத்திற்குள் 4 பெண்கள் உள்ளிட்ட 12 மரணங்கள் பதிவாகியுள்ளன. இம் மரணங்களில் 3 மரணங்கள் பள்ளிக் கூட மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர் கூறினாலும் மக்களுக்கு சந்தேகம் இருப்பதாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவிக்கின்றார்.

கிண்ணியா பிரதேசத்தை அனர்த்த பிரதேசமாக பிரகடனம் செய்து ஆய்வு நடத்தி இதன் உண்மைத் தன்மை கண்டறிப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கோரிக்கை முன் வைத்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது சிரமதானம் மூலம் துப்பரவு பணிகள் நடைபெற்று வருகின்றன. விழிப்புணர்வு செயல் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொசுக்கள் பெருகும் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சுகாதார துறையினரால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 71 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 247 பேருக்கு எதிராக எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவிக்கின்றது.

சமூக ஊடகங்களிசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்