சசிகலா நியமனம் செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். கோரிக்கை

அதிமுக சட்ட விதிகளுக்கு மாறாக, பொதுக்குழுவால் பொதுச் செயலராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி.க்களும், மஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட எம்.எ.ல்.ஏ.க்களும் இன்று பன்னீர் செல்வம் தலைமையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் முழுக்குழுவையும் சந்தித்தார்கள்.

அந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்து கொண்டார்.

"அதிமுக சட்ட விதிகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாறாக, பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த நியமனம் செல்லாது என அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கிறோம்," என்றார் பன்னீர் செல்வம்.

ஆனால், சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டபோதே அது தாற்காலிக நியமனம் என்று அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதிமுக சட்ட விதிகளின்படி, தாற்காலிகப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய முடியாது. அப்படியிருக்கும்போது, தாற்காலிக நியமனம் எப்படிச் செய்ய முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அவ்வாறு தாற்காலிகமாக சசிகலா நியமிக்கப்பட்டபோது, அதில் நீங்களும் ஒரு பங்காளராக இருந்தீர்களே, அப்போது ஏன் அதுகுறித்துச் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், என்ன காரணங்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

Image caption ஓ.பி.எஸ். அணி செய்தியாளர் சந்திப்பு

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோருவது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

"கட்சியின் பொதுச் செயலர்தான் சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவர் இல்லாத நிலையில், அவைத் தலைவர் அல்லது பொருளாளருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே, இரட்டை இலையை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம்," என்றார் பன்னீர் செல்வம்.

அதிக அளவு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கின்ற போதிலும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாதது ஏன் என்று கேட்டபோது, 122 எம்.எல்.ஏ.க்களைவிட, அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இருப்பதால், ஆர்.கே நகரில் சிறந்த வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஓ. பன்னீர் செல்வம் பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நிலையான ஒரு நிலையை எடுக்க முடியாதவர்கள், அந்தப் பழியை தங்கள் மீது சுமத்துவதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பொதுத் தேர்தல் வர வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்