தமிழகத்தின் கடன் 3,14,366 கோடி: பட்ஜெட்டில் தகவல்

2016-17ஆம் நிதியாண்டில் தமிழக பட்ஜெட் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 4.58 சதவீதமாக இருக்கும் என மாநில நிதியமைச்சர் ஜெயகுமார் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார். 2017-18ல் இது 3 சதவீதமாக குறையும் என்றும் தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DIPR
Image caption பட்ஜெட் தாக்கலாகும் முன்பு முதல்வருடன் நிதியமைச்சர் ஜெயகுமார்

தமிழ்நாட்டின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் தாக்கல்செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

இன்று காலையில் பட்ஜெட் உரையை ஜெயகுமார் வாசிப்பதற்கு முன்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட சிலருக்கு நன்றி தெரிவித்து பேச்சைத் துவக்கினார். இதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த சலசலப்புக்குப் பிறகு, மீண்டும் தனது பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார் ஜெயகுமார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.94 சதவீதமாகவும் அடுத்த ஆண்டில் 9 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டிருப்பதாக ஜெயகுமார் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாய் 1,59,363 கோடிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் 87,287 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் இது 99,590 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் சுமார் 1,000 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், வரும் ஆண்டில் அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் 6,903 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிதியாண்டில் செலவு 1,75,293 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2016-17ல் நிதி பற்றாக்குறை 40,534 கோடியாக முதலில் கணக்கிடப்பட்டு பிறகு அந்தக் கணிப்பு 61,341 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதி நிர்வாக பொறுப்புடமைச் சட்டத்தில் குறிப்பிட்ட வரையறையைவிட இது அதிகம் என்றாலும் வரும் நிதியாண்டில் இது குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்வாரியத்தைச் சீரமைப்பதற்கான உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாவும் நிதிநிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

படத்தின் காப்புரிமை DIPR
Image caption பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் ஜெயகுமார்

2018 மார்ச் மாத இறுதியில் மாநிலத்தின் நிகர கடன் 3,14,366 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள 585 கோடி ரூபாயும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள 615 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் விலையில்லா ஆடு - மாடு வழங்கும் திட்டத்தின் கீழ், 12,000 கறவைப் பசுக்களும் 6 லட்சம் ஆடுகளும் வழங்கப்படவுள்ளன.

போக்குவரத்துத் துறையில் டீசல் மாணியம், பயணச் சலுகை உள்ளிட்டவற்றிற்காக 2,192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் மீண்டும் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜெனரிக் மருந்து எனப்படும் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கடைகளை அமைக்கப்போவதாகவும் கிராமப்புறங்களில் கூட்டுறவு கழகங்களின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்