பெண்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரிகள் யார் என தெரியவில்லை: கனிமொழி

  • 18 மார்ச் 2017

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால் அது சட்டமாவதை எதிர்ப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு 33 சத இடஒதுக்கீடு கோரி டெல்லியில் திங்கள்கிழமை திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

அது குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்ற கனிமொழி, அரசியல் என்பது பெண்களுக்கு இரண்டு மடங்கு சவாலான துறையாக உள்ளது என்றார்.

''ஆண்களே அரசியலில் முன்னேறுவது சவாலானது என்று கூறும்போது, பெண்களுக்கு இரண்டு மடங்கு பிரச்சனை உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா என எல்லா கட்சிகளும் பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்திற்கு ஆதரவான நிலையில் இருந்தாலும், 20 ஆண்டுகளாக அதை சட்டமாக்குவதில் பிரச்சனை நீடித்துவருகிறது. தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக அரசு நினைத்தால் இந்த மசோதாவை சட்டமாக கொண்டுவர முடியும்,'' என்றார் கனிமொழி.

தற்போது வெறும் 12 சதவீத அளவுக்கு கூட பெண்கள் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலை உள்ளது என்ற அவர், ''தேர்தலில் பங்குபெற ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. அது போல பெண்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இடஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும்,'' என்றார் கனிமொழி.

இடஒதுக்கீடு மூலம் பதவியில் உள்ள பெண் அரசியல் தலைவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஒரு சில இடங்களில் அது போன்ற தவறுகள் நடக்கலாம். ஆண்கள் கூட அவர்கள் பதவியில் இருந்தாலும்,அவர் மீது அவரை பதவிக்கு கொண்டு வந்த நபர் ஆதிக்கம் செலுத்துவது நடக்கிறது,'' என்றார்.

அவர் மேலும்,'' பஞ்சாயத்து தலைவர்களாக உள்ள பெண்கள் பலர் பொது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். பல பெண்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர். ஒரு சில இடங்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு பொதுப்படையாக பெண்கள் பணியாற்றுவதில் சிக்கல் இருப்பதாக நாம் எண்ணக்கூடாது,'' என்றார்.

இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய கனிமொழி, திமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்