ஆர்.கே. நகருக்கு வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்; மக்கள் நலக்கூட்டணியில் பிளவு

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

Image caption ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் வேட்பாளராக அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம், மக்கள் நலக்கூட்டணியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், தமிழகத்தில் அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கிறது என்றும் தி.மு.க. இந்தச் சூழலைத் தனதாக்க முயற்சிப்பதாகவும் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும் ஆகவே ஜனநாயக மரபுகளைக் காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்பட்டுவந்தன.

மீண்டும் கவனம் பெறும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி

ஆர்.கே. நகர் அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் என். மருது கணேஷ்

ஆனால், ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் தொடர்பாக இந்தக் கட்சிகளுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க. ஆகியவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கருதிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட விரும்பியது. ஆகவே, அந்தக் கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.

"இந்தத் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்புக்குள் பேசினோம். ஆனால், கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகவே நாங்கள் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். கூட்டமைப்பின் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்" என ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஏன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற கேள்விக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதிலளிக்க விரும்பவில்லை. கூட்டமைப்பு தொடருமா என்ற கேள்விக்கும் அவர் தெளிவாக பதில் கூறவில்லை.

திருமாவளவன், முத்தரசன் கருத்து

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி தேர்தல் தவிர்த்த பிற விவகாரங்களில் ஒன்றாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.

யாருக்கு ஆதரவளிப்பது, என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மதச்சார்பற்ற சக்திகள் ஆதிக்கம் பெறுவதைத் தடுக்க, அதற்கு எதிராக உள்ள அணிகள் ஒன்றுபட்டு செயல்படுவது குறித்து முயற்சித்தோம். ஆனால், அதில் ஒருமித்த நிலை ஏற்படவில்லை. அதற்காக, மக்கள் நலக்கூட்டணியில் பிளவு என்று இதைப் பார்க்கக் கூடாது என்றார் முத்தரசன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணியில் இந்த மூன்று கட்சிகள் தவிர, வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இடம்பெற்றிருந்தது. பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சி கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றது.

ஜெயலலிதா மறைவால் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

ஏற்கெனவே அ.தி.மு.கவின் சசிகலா பிரிவின் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க. சார்பில் மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், பாரதீய ஜனதா சார்பில் கங்கை அமரன் ஆகியோர் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்