வகுப்புவாத சக்திகளை தடுப்பதில் மக்கள் நலக் கூட்டணிக்குள் முரண்பாடு - முத்தரசன்

  • 18 மார்ச் 2017

வகுப்புவாத கட்சிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செல்பாடுகளை எதிர்கொள்ள இன்றைய சூழலில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று விவாதித்ததில் மக்கள் நலக் கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கும் நிலையில், பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த முத்தரசன் இவ்வாறு கூறியிருக்கிறார்,

மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அவர், ஆர்.கே. நகர் தொகுதியை ஒரு இடைத்தேர்தலாக மட்டுமே பார்க்க முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள், வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிகள், தலைதூக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டியுள்ளதை உணர்ந்தோம். அதற்கு என்ன செய்யவாம் என்று கலந்தாய்வு செய்தபோது, பெரிய கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

திமுக தங்களுக்கு இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிக்க பிற கட்சிகளை கேட்டு கொண்டுள்ளதே. அதற்கு ஆதரவளிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆமோதித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்று கொள்ளாததால்தான் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அனைத்து கட்சிகளும் பிற கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

அது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறதா என்று கேட்டபோது, மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது, தொடர வேண்டும். இன்றைய சூழலில் முடிவு எடுப்பதில் மாறுபாடுகளை தடுக்க முடியவில்லை. இது சின்ன வேகத்தடை தான் என்று முத்தரசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்