ஆரோக்கிய இதயங்களின் சொந்தக்காரர்கள் யார்? புதிய ஆய்வில் புலப்படும் உண்மைகள்

உலகிலேயே ஆரோக்கியமான இதயத்தை உடையவர்கள் பொலிவியா காடுகளில் வசிக்கும் சீ-மா-னே மக்கள் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை MICHAEL GURVEN

சீ-மா-னே மக்களில், வயதானவர்கள் உட்பட எவருக்குமே இதயத் தமனிகளில் அடைப்புகள் இல்லை என லான்செட்டின் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

"மிகவும் அற்புதமானவார்கள் இந்த மக்கள் என்று கூறும் ஆய்வாளர்கள், இவர்களின் உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாக கூறுகின்றனர்.

அவர்களின் வேட்டையாடும் குணத்தையும், பண்டைய விவசாய முறைகளையும் யாராலும் மாற்றமுடியாது என்று கூறும் ஆய்வாளர்கள், அவர்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குவதை ஒப்புக்கொள்கின்றனர்.

பொலியாவின் தாழ்வான பகுதிகளில், அமேசான் மழைக்காடுகளில் பாயும் மனிக்குய் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழும் இந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16,000. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்க்கை முறைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தை ஒத்ததாக உள்ளன.

அவர்களை சந்திக்க சென்ற விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் பல விமானப் பயணங்களையும், படகு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

படத்தின் காப்புரிமை Image copyrightBEN TRUMBLE

உணவுப் பழக்கம் - ஓர் ஒப்பீடு

•காட்டுப் பன்றி, பன்றி, உலகின் மிகப்பெரிய விலங்கான காபிபாரா, ஆகியவை அவர்களின் உணவில் 17% இடத்தை பிடித்துள்ளது.

•7% பிரான், கேட்பிஷ் மற்றும் நன்னீரில் வாழும் மீன்கள்.

•குடும்ப விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி, ராகி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம் போன்ற பழம், இவர்களின் உணவில் பிரதான இடத்தை பிடித்துள்ளது.

•காட்டுப்பழங்கள் மற்றும் கொட்டை வகைகள்.

•கார்போஹைட்ரேடில் இருந்து இவர்கள் பெறும் சத்துக்களின் அளவு 72% ஆக இருக்கும் நிலையில், அமெரிக்கர்கள் பங்கு வெறும் 52%.

•உணவில் இருந்து அமெரிக்கர்கள் பெறும் கொழுப்புச்சத்து 34%., ஆனால் கொழுப்பில் இருந்து 14% சதத்தை மட்டுமே பெறும் சீ-மா-னேக்கள் அதையும் செறிவான கொழுப்பாகவே பெறுகிறார்கள்.

•புரதச் சத்தில் இருந்து இரு தரப்பினரும் எடுத்துக்கொள்ளும் கலோரி 14% ஆக இருந்தாலும், சீ-மா-னேக்கள் சவ்வற்ற இறைச்சியையே (lean meat) அதிகம் உண்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை MICHAEL GURVEN

அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமானவர்கள்?

கடின உழைப்பாளிகளான சீ-மா-னேக்களில், நாளொன்றுக்கு பெண்கள் சுமார் 16,000 அடிகள் நடந்தால், ஆண்களோ 17,000 அடிகள் நடக்கின்றனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட தினசரி15,000 அடிகளுக்கு மேல் நடக்கிறார்கள்.

மற்றவர்கள், நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் நடப்பதே பெரிதாக நினைக்கும் நிலையில், அவர்களின் நடைப்பழக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

அதிக தொலைவு நடப்பதே அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் என்று கலிபோர்னியாவில் இருக்கும் லாங் பீச் மெம்மோரியல் மையத்தின் ஆய்வாளர் டாக்டர் கிரிகொரி தாமஸ் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை MICHAEL GURVEN

இவர்களின் இதயம் எந்த அளவு சிறப்பு வாய்ந்தது?

கரோனரி தமனி கால்சியம் அல்லது "சி.ஏ.சி" குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

பதப்படுத்தப்பட்ட உடல்களை ஆராய்ச்சி செய்யும் குழுவினருடன் இணைந்து செயல்பட்ட விஞ்ஞானிகள், சி.டி ஸ்கேனரை பயன்படுத்தி 705 பேரின் இதயங்களை ஆராய்ந்தனர்.

பொதுவாக 45 வயதில், அமெரிக்கர்களில் 25% பேருக்கு சி.ஏ.சி இருக்கும் நிலையில், சீ-மா-னேக்களில் ஒருவருக்கு கூட அது இல்லை.

75 வயதில் பெரும்பான்மையான (80%) அமெரிக்கர்களுக்கு சி.ஏ.சி அறிகுறி காணப்படும்போது, மூன்றில் இரண்டு பங்கு சீ-மா-னேக்களுக்கு சி.ஏ.சி அறிகுறியே இல்லை என்பது ஆச்சரியமான தகவல்.

விஞ்ஞானிகளின் குழுவினர் நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆரோக்கியக் குறைபாட்டினால் சீ-மா-னேக்களில், இளம் வயது மரணமே கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வேறு எந்த மக்கள் இனத்திலும் இவ்வளவு குறைவான விகிதம் இல்லை என, சாண்டா பார்பராவில், கலிஃபோர்னியா பல்கலைக்கழக்கத்தில் மானுடவியல் பேராசிரியராக பணிபுரியும் மைக்கேல் குர்வேன், பி.பி.சியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை MICHAEL GURVEN

உணவு பழக்க-வழக்கம், உழைப்பு இதற்கு காரணமா?

சீ-மா-னேக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டாலும், உடல் வீக்கத்தினால் நோய்த்தொற்றுக்களும், இதய பிரச்சனைகள் அதிகமாகும் சாத்தியங்களும் இருக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் குடல்புழுக்கள் தான் இதற்கு காரணமா? இது அவர்களிடையேயும் இயல்பாக இருக்கிறது, இதுவும் இதயத்தை பாதுகாக்க உதவலாம்.

இவற்றில் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன?

பேராசிரியம் குர்வென் சொல்கிறார்: "வார இறுதியில் மட்டுமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, உடற்பயிற்சியை முழுமையான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்".

"இருசக்கர மிதிவண்டியை பயன்படுத்துங்கள், படிகளை பயன்படுத்துங்கள், டிரெட் மில் உடற்பயிற்சி இயந்திரத்தை பயன்படுத்தும்போதே உங்கள் கதையை எழுதுங்கள்." என்கிறார்.

டாக்டர் தாமஸ் சொல்கிறர்:"ஆரோக்கியத்தை பராமரிக்க இது உதவும், வழக்கமான நமது உழைப்பை மேலும் அதிகப்படுத்தவேண்டும்".

"நவீன உலகம் நம்மை வாழவைக்கிறது, ஆனால் நகரமயமாக்கல் மற்றும் உழைப்பில் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெறச் செய்யும் நடைமுறைகளும் இதயத்தின் ஆரோக்கிய குறைவுக்கான காரணங்களாக மாறுகிறது.

"சிறிய சமூக குழுக்களாக வசிக்கும் அவர்களின் வாழ்க்கை, சமுதாய சார்புடையதாகவும், நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டதாகவும் இருக்கிறது" என்று சுட்டிக்காட்டுகிறார்.

படத்தின் காப்புரிமை MICHAEL GURVEN

ஆய்வின் அடிப்படையில் நிபுணர்களின் கருத்து

எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் துறையில் (இதய நோய்) மூத்த விரிவுரையாளரான டாக்டர் கவின் சாண்டர்காக் கூறுகிறார்: "இது ஒரு சிறப்பான, தனித்துவமான கண்டுபிடிப்பு".

"கார்போஹைட்ரேட்டில் இருந்து 72% சக்தியை சீ-மா-னேக்கள் பெறுகின்றனர்".

"கார்போஹைட்ரேட்டுகள் ஆரோக்கியமற்றவை என்று கூறும் அண்மை ஆய்வுகளுக்கு நேரெதிராக, இதயம் தொடர்பான ஆரோக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக சீ-மா-னேக்கள் விளங்குகின்றனர்".

க்ளாஸ்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நவீத் சட்டர் கூறுகிறார், "இதயநோய் குறித்த நமது தற்போதைய புரிதல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் நிதர்சனமான வாழ்வியல் ஆய்வு (நிஜ வாழ்க்கை குறித்த ஆய்வு) இது".

"ஆரோக்கியமான உணவுப் பழக்கம், குறைவான சவ்வற்ற (ஜவ்வில்லா) இறைச்சி, பதப்படுத்தாத உணவுகளை உண்பது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இதய நாளங்கள் பாதிப்பை குறைக்கும் காரணிகளுடன் தொடர்புடையவை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்