மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவில்லை: திருமாவளவன்

  • 19 மார்ச் 2017

வரவிருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தாங்கள்எடுத்த முடிவு குறித்து திருமாவளவன் கூறுகையில், ''தொடக்கத்தில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லை. இதனால் எந்த பயனும் இல்லையென கூறி வந்தது'' என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ''அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அகில இந்திய அளவில் மதவாத சக்திகள் வலிமை பெறுவதை தடுக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றினைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுவில் எடுக்கப்பட்ட முடிவை. தமிழக இடைத்தேர்தலிலும் செயல்படுத்த அக்கட்சி முடிவெடுத்தது'' என்று கூறினார்.

''ஆனால், நாடாளுமன்ற தேர்தலை பற்றி தற்போது எண்ணத் தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியது'' என்று தெரிவித்த திருமாவளவன், தனது கட்சியில் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கையில், ''இடதுசாரி கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பது முக்கியம் என்று எண்ணிய விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்பியது'' என்று கூறினார்.

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகுமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை அறிவித்த பிறகு, இந்த இடைத்தேர்தலில் நாம் யாரையும் ஆதரிக்கவும் வேண்டாம் ,போட்டியிடவும் வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புதிய முடிவை எடுத்தது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரித்தது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை எடுத்த இந்த முடிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு ஏற்படுமா என்று கேட்டதற்கு, ''இந்த கூட்டு இயக்கத்தில் இருந்து தாங்கள் விலகப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவது என்ற ஒற்றை நிலைப்பாட்டை மட்டுமே அந்த கட்சி எடுத்துள்ளது'' என்று திருமாவளவன் விளக்கமளித்தார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று தமிழக முதல்வரும், ஆர்.கே சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 12-ஆம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, திமுக, அதிமுக, ஓபிஎஸ் தலைமையிலான அணி, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

மக்கள்நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்தது. தமிழ் நாட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்கவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்