தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தகவல்: வழக்கறிஞர் பேட்டி

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரை தங்கள் மகன் என்று உரிமை கோரும் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தகவல்

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்த வழக்கு தொடர்புடைய விசாரணை திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விவரங்களை வெளியிட்டார்.

லேசர் சிகிச்சை மூலம் அங்க அடையாளங்கள் நீக்கமா?

அதன்படி, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பிலான ஆதாரங்களில் கூறியுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என்றும், அந்த அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சை மூலம் நீக்கியிருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் டைட்டஸ் கூறினார்.

மேலும் அந்த மருத்துவ அறிக்கையின் நகல் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய டைட்டஸ் தெரிவித்தார்.

தனுஷை சொந்தம் கொண்டாடுகிற மதுரை மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன் மற்றும் கே. மீனாட்சி தம்பதியர், அவர் கல்வி பயின்றதாக கூறுகின்ற மேலூர் அரசு மாணவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியதாக கூறுகின்ற பள்ளி மாற்றுச் சான்றிதழை முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லேசர் சிகிச்சை மூலம் தனுஷின் அங்க அடையாளங்கள் நீக்கமா?

அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் அங்க அடையாளங்களான மச்சங்கள் சரியானவையா என்று சோதித்து அறிவதற்காக தனுஷ் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அந்த குறிப்பிட்ட தினத்தில், மதுரை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.

அவரது உடல் அடையாளங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழில் வழங்கப்பட்டுள்ள மச்சங்களை சரிபார்க்க தனுஷ், அரசு மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்டார்.

அந்த மருத்துவ ஆய்வு அறிக்கை பின்னர் மார்ச் மாதம் 2-ஆம் தேதியன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது மருத்துவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை (மார்ச் 20-ஆம் தேதி) நடைபெற்றபோது , மருத்துவ அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

இன்று வெளியாகிய மருத்துவ அறிக்கையின் விவரங்கள், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியருக்கு ஆதரவானதாக உள்ளது என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

"மருத்துவக் குழு அளித்த அறிக்கையின்படி, தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது", என்று டைட்டஸ் தெரிவித்தார்.

அத்தோடு இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பிரகாஷ், அடுத்தக்கட்ட விசாணையை வரும் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்