இந்திய கடவுளின் போதை பானம் `பாங்'

  • 22 மார்ச் 2017

நூற்றுக்கணக்கான பயணிகள் இருபுறமும் உள்ள சுவர்களில் புகையிலையை மென்று துப்பிருப்பதால் சுவர்களில் சிவப்பு கரைகள் படிந்த, வாரணாசியின் குறுகலான தெருக்கள் வழியாக நான் பயணித்தேன்.

படத்தின் காப்புரிமை The Washington Post
Image caption வாரணாசியில் 200 க்கும் மேற்பட்ட பாங்க் கடைகள் உள்ளன

வாரணாசி நகரத்தின் மிக பழமையான ஒரு பகுதியான கோடோவ்லியா சவுக் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அங்கு கமலேஷ் குமார் பாதக் என்ற நபருக்கு சொந்தமான 'காசி விஸ்வநாதர் தண்டை கர்' என்ற சிறிய தெரு கடையை தேடி சென்றேன் . தண்டை என்ற ஒரு பொருளுக்கு பெயர் போனது தான் அந்த கடை.

பாலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த இந்திய பானம் ஆப்பிள், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற சுவைகளை கொண்டதாகவும் தயாரிக்கப்படும். ஆனால் பாதக்கின் கடை 'ஸ்பெஷல் தண்டை ' பானம். போதை தரும் இலைகளை கொண்டு புதிதாக தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

பாங், நெடுங்காலமாக இந்தியாவில் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்து மதத்தை பொறுத்தவரையில், பாங் என்ற செடி , அழிவுக்கான கடவுளான சிவன் விரும்பும் செடி என்ற சிறப்பும் பெற்றது. தன் உள்ளத்தை நோக்கி அதிகமாக கவனம் செலுத்தவும், உலக நன்மைக்காக தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தவும் சிவன் பாங்கை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Dinodia Photos / Alamy Stock Photo
Image caption தண்டை ஒரு பால் அடிப்படையிலான, மசாலா கலந்த இந்திய பானம் ஆகும்

இந்துமதத்தின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில், உலகின் ஐந்து மிகவும் புனிதமான தாவரங்களில் ஒன்றாக போதை செடியும் பார்க்கப்படுகிறது.

வேதத்தில் இந்த தாவரம் மகிழ்ச்சியின் ஆதாரம் என்றும் விடுதலை தரக்கூடியது என்றும் கூறுகிறது.

போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985-ன் படி, போதை செடியின் உற்பத்தி, விற்பனை மற்றும் அந்த செடியின் சில பாகங்களை உண்பதற்கு தடை உள்ளது. ஆனால் அதன் இலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சல்மர் மற்றும் புஷ்கர் நகரங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாங் கடைகள் உள்ளன. மேலும் வாரணாசியை சுற்றி பாதக்கின் கடையை போல 200 கடைகள் உள்ளன.

இந்தியாவின் பிராமண சமூகத்தில் போதை செடி மிகவும் பிரபலமாக இருந்துவருகிறது. அவர்கள் மற்றவகையிலான மது அல்லது போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில் பாரம்பரியமாகத் தடை உள்ளது.

வாரணாசி உட்பட இந்தியாவின் சில இந்து மதத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சாமியார்கள் பாங்கை நேரடியாக உண்பதையோ, சிலும்(chillum)என்று அழைக்கப்படும் மண்ணால் செய்யப்பட்ட ஒரு குழல் வழியாக புகைப்பதையோ பார்க்கமுடியும்.

சுமார் 150 ஆண்டுகளாக சிவனின் திருத்தலமாக உள்ள வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அருகே பாதக்கின் குடும்பம் பாங்கை வழங்கிவருகிறது.

பாதக் பாங் தயாரிக்கத் தேவையான மூலப் பொருளை உள்ளூரில் அரசால் அங்கீரகரிக்கப்பட்டுள்ள ஒரு கடையில் இருந்து பெறுகிறார்.

போதை செடியை ஒரு மிதமான சுடுநீரில் நனைக்கிறார், பின் கரகரவென இருப்பது போன்ற ஒரு மாவு போல அரைக்கிறார். இந்த மாவு உண்பதற்கு தயாராகிவிடுகிறது.

அதிகாலை நடக்கும் பிராத்தனையின் போது சிவனின் பக்தர்கள் அவருக்கு அளிக்கும் பிரசாதமான ஸ்பெஷல் தண்டை குறித்து பேசும்போது, ஒவ்வொரு நாளும் காலை 3 மணிக்கு மங்கள ஆரத்தியின்போது பாரம்பரியமாக இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் இது தான்,'' என்கிறார் பாதக்.

படத்தின் காப்புரிமை Aroon Thaewchatturat / Alamy Stock Photo
Image caption அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாங் கடைகள்

இந்துமத கொண்டாட்டங்களில் ஒன்றான சிவராத்தி மற்றும் ஹோலியின் போது பாங் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது.

இந்த சமயங்களில் பாங்குடன் சேர்ந்து பாரம்பரியமான தண்டை தெருக்களில் மக்களிடம் களிப்பை ஏற்படுத்துகிறது.

வழக்கத்தை விட விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு பாங் அளிப்பதாக பாதக் கூறுகிறார்.

முதல் மற்றும் ஒரே ஒரு முறை, பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஹோலி திருவிழாவின் போது, நான் ஸ்பெஷல் தண்டை உண்ண முயற்சித்துள்ளேன்.

தொடக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான மயக்கம் அதை அடுத்து பல மணிநேரத்திற்கு நீடித்த ஒரு வித பிரமை போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது தான் எனது அனுபவம்.

பாங் பானத்திற்காக, பாதக்கின் கடைக்கு வாடிக்கையாக வரும் நபர்கள் வரிசையில் நின்று வாங்குவதையும், அதை தொடர்ந்து பருகும் அவர்களின் திறனையும் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

தண்டை மற்றும் பாங் இரண்டு பானங்களுக்கும் ஒரே மூலப்பொருள் என்றாலும், பாங் பானத்தில் தயிர் கலக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Hindustan Times/gettyimages
Image caption சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாங் இந்து மத கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது

விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் ப்ளூ லஸ்ஸி ஷாப் என்ற ஒரு உள்ளூர் கடை உள்ளது. அங்கு 80 விதமான வகைகள் உள்ளதாக பட்டியல் இடப்பட்டுள்ளது.

விளம்பரம் செய்யப்படாத சிறப்பு பானமும் உண்டு. அது குறிப்பாக கேட்பவர்களுக்கு மட்டும் தயார் செய்து தரப்படும்.

பாங் தின்பண்டமான பக்கோராவுடன் கலந்து அல்லது பொரித்த உணவான பிரபலமான சமோசா மற்றும் கச்சோரியுடன் சட்னி மற்றும் ஊறுகாய் போன்றவற்றுடன் அளிக்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கடைகளில் இனிப்பு பாங் லட்டு வகையிலும் விற்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Diptendu Dutta/Stringer/Getty

மிதமான அளவில் எடுத்துக்கொண்டால், பாங்கில் மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்து மதத்தில் கடவுள்களுக்கு இடையில் நடந்த ஒரு பிரபலமான ஒரு சம்பவம் என்று சொல்லப்படும் நிகழ்வில், கடவுளர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் அமிர்தத்தை எடுக்க நடந்த போட்டியில் வெளியேறிய ஆலகால விஷத்தை சிவன் உண்டார் என்றும் அதனால் அவரின் தொண்டை நீல நிறமாக மாறியது என்றும் அவருக்கு ஏற்பட்ட வலியில் இருந்து மீள பார்வதி பாங்கை அளித்தார் என்றும் கூறப்படுகிறது.

1800களின் மத்தியில் தங்களது ஆட்சியை நிறுவிய பிரிட்டிஷார், இந்தியாவில் பெரிய அளவில் பாங் பயன்படுத்துவது குறித்து ஆச்சரியம் அடைந்தார்கள். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் இந்த மருந்தின் விளைவுகள் மற்றும் கலாசார முக்கியத்துவம் குறித்து ஓர் ஆராய்ச்சியை தொடங்கினர்.

''போதை செடியின் பயன்பாட்டை தடை செய்வது அல்லது அதன் பயன்பாட்டை கடுமையாக தடுப்பது என்பது மக்களிடம் பாதிப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தும்,'' என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்திய ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தில் இன்று வரை பாங் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆனால் நினைவில் அகலாத அந்த ஹோலி திருவிழாவின் காலை பொழுதில் இருந்து பாங் குறித்து தெளிவாக இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்