அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை நடைமுறையில் சாத்தியமா?

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், இருதரப்பும் பிரச்சனையை பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனை. உணர்வுகளை பாதிக்கும் இதுபோன்ற பிரச்சனைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதே உகந்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை நிராகரிக்கும் பாபர் மசூதி நடவடிக்கைக் குழு, இந்த விவகாரம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்று, எந்தவித பயனும் இல்லாமல் தோல்வியில் முடிந்துவிட்டதாக கூறுகிறது.

"பேச்சுவார்த்தை என்பதன் பொருள் சரணாகதி" என்று பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரான சையத் காசிம் ரசூல் இல்யாஸ் சொல்கிறார்.

பி.பி.சியிடம் பேசிய அவர், "அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் (2010-ஆம் ஆண்டின் தீர்ப்பு) தீர்ப்பு வருவதற்கு முன்பே, வி.பி.சிங் பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே, விஷ்வ ஹிந்து பரிஷத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவற்றில் எந்தவித முடிவும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

இதை தவிர, "இது ராமர் அவதரித்த இடம். எங்கள் உணர்வுகளுடன் இணைந்துள்ள இடம் இது. இதை விட்டுவிடுங்கள் என்று மற்றொரு கட்சி சொல்கிறது. இதற்கு நாங்கள் என்ன சொல்வது?" என்று இல்யாஸ் கூறுகிறார்.

காசிம் ரசூல் இலியாசின் கருத்துப்படி, நீதிமன்றம் தீர்ப்பளிக்க தயங்குகிறது.

"சமரசம் செய்து கொள்வதற்காக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. பிரச்சனையை தீர்ப்பதும், நீதி வழங்குவதும்தான் நீதிமன்றத்தின் கடமை; சமரசம் செய்வதல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது பற்றி தங்களுக்கு கவலையில்லை என்று காசிம் ரசூல் இலியாஸ் உறுதியாக சொல்கிறார்.

சுப்ரமணியன் சுவாமி கருத்து

அயோத்தி விவகாரம் தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். "இரண்டு ஆண்டுகளுக்குள் அயோத்தில் ராமர் ஆலயம் கட்டுவோம் என்றும், அதுவும் ஆலயம் முதலில் இருந்த இடத்திலேதான் கட்டப்படும்" என்றும் பிபிசியிடம் சுவாமி தெரிவித்தார்..

"வேறு எங்கும் ராமர் ஆலயம் கட்டமாட்டோம். இது நம்பிக்கை தொடர்புடைய விசயம்" என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

1992-ஆம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டில் அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னெள சட்ட அமர்வின் ஏகோபித்த தீர்ப்பு "ராமரின் சிலை இருக்கும் இடத்திலேயே அது அப்படியே இருக்கும். எஞ்சியுள்ள நிலம் மூன்று சமமான பகுதிகளாக பிரிக்கப்படும்".

நிலத்தின் ஒரு பிரிவு, சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்