`நடிகர் தனுஷ் உடலில் அங்க அடையாளம் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் இல்லை'

  • 22 மார்ச் 2017

நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர் தரப்பினர் கூறுவது போல அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிபிசி தமிழிடம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்தனர்.

`தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தகவல்'

அந்த வழக்கு தொடர்புடைய விசாரணை திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சில விவரங்களை வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதன்படி, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பிலான ஆதாரங்களில் கூறியுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என்றும், அந்த அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சை மூலம் நீக்கியிருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் டைட்டஸ் கூறினார்.

இதுகுறித்து, தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, அந்த மருத்வ அறிக்கை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட அறிக்கை என்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் முதல் கேள்வியில், தனுஷ் மீது எதிர்தரப்பினர் சொல்லும் அங்க அடையாளம் உள்ளனவா என்பதுதான் என்ற சுவாமிநாதன், "எதிர் தரப்பினர் சொல்லும் அங்க அடையாளங்கள் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் பதிவாகியுள்ளது. அறிக்கை தெளிவாக சொல்கிறது," என்றார்.

"மருத்துவ அறிக்கை தனுஷுக்குத்தான் சாதகமாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்தரப்பினர் வேண்டுமென்றே துஷ்பிரசாரம் செய்கின்றனர்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

லேசர் சிகிச்சை மூலம் அடையாளம் அகற்றப்பட்டதாக டைட்டஸ் கூறியது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் சுவாமிநாதன், லேசர் சிகிச்சை மூலம் அடையாளங்களை அழிக்க முடியுமா என்று நீதிமன்றம் பொதுவான கேள்வி எழுப்பியிருக்கிறது. அந்தக் கேள்விக்குத்தான், லேசர் சிகிச்சை மூலம் அழிக்க முடியும் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தனுஷ் உடலில் இருந்த அடையாளங்களை லேசர் சிகிச்சையில் அழித்திருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை," என்றார் சுவாமிநாதன்.

"உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அறையில் இந்த விசாரணையை நடத்துகிறார்கள். இந்த நிலையில், மருத்துவ அறிக்கை கையில் கொடுக்கப்பட்டதும், அதை வைத்து அடுத்த விசாரணையில் பேச வேண்டும். மாறாக, வாட்ஸ்-ஆப்பில் அதை வெளியிடுவது தொழில் ரீதியாக தவறு," என்று சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்தார்.

அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது,, மருத்துவ அறிக்கை தொடர்பான முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தனுஷின் பெற்றோர் யார் என்பது தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் கோரும் நிலையில், அதுபற்றி நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை எடுத்து வைக்கப் போவதாகவும் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் தனுஷ்; அங்க அடையாளங்கள் மருத்துவர்களால் ஆய்வு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்தக் கோரி தம்பதியர் மனு

தனுஷை சொந்தம் கொண்டாடுகிற மதுரை மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன் மற்றும் கே. மீனாட்சி தம்பதியர், அவர் கல்வி பயின்றதாக கூறுகின்ற மேலூர் அரசு மாணவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியதாக கூறுகின்ற பள்ளி மாற்றுச் சான்றிதழை முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்