இரட்டை இலை சின்னம் முடக்கம்; அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை

அதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோருவதால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் முடிவு: ஓ.பி.எஸ்

இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை: டிடிவி தினகரன்

Image caption தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்குப் பொருந்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், செம்மலை ஆகியோரைக் கொண்ட அணியோ, வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரைக் கொண்ட அணியோ `அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ' என்ற பெயரைப் பயன்படுத்த முடியாது.

அதேபோல், அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என ஆணையம் அறிவித்துள்ளது.

இரு அணிகளும் தங்களுக்கு தேவையான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டால், அதில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் மூலப் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான சின்னத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று சின்னங்களின் விருப்பப்பட்டியலை அளிக்க வேண்டும். அதில் ஒன்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கித் தரும்.

விருப்பமான பெயர், சின்னம் ஆகியவற்றை, வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இரு அணிகளும் தங்கள் வாதத்தை நிரூபிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தும்.

இரண்டாவது முறையாக முடக்கம்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, கடந்த 1989-ஆம் ஆண்டு இரட்டை இலைச் சின்னம் முடக்கப்ட்டது. தற்போது இரண்டாவது முறையாக முடக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இரு அணிகள் உருவாயின. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணியும் ஏற்பட்டன.

இந் நிலையில், ஆர்.கே. நகருக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இரு அணிகளிடத்திலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என இரு அணிகளும் கோரிய நிலையில், இன்று தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளின் சார்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் சைதி தலைமையிலான முழு தேர்தல் ஆணையத்தின் முன்பு இரு தரப்பிலிருந்தும் தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள்.

சசிகலா அணியின் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, மோகன் பராசரன் மற்றும் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.

பன்னீர் செல்வம் அணியின் சார்பில், சி.எஸ். வைத்யநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

பகல்11 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை இரு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தன.

பொதுச் செயலர் நியமனம் பற்றி தற்போது ஆய்வு இல்லை

புதன்கிழமை நடந்த விவாதத்தின்போது, சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட முறை குறித்து எதிர் தரப்பு கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியற்ற நபர், தேர்தலில் வாக்களிக்க முடியாத நபர், எந்தத் தகுதி அடிப்படையில் ஒரு கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியப் பொறுப்புக்கு எப்படி நியமிக்கப்பட முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அவர் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கட்சியில் பிளவு இல்லை என்றும், உள்கட்சி அதிருப்திதான் என்று சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மதுசூதனன் தலைமையில் ஓர் அணியும், சசிகலா தலைமையில் இன்னொரு அணியும் என இரண்டு போட்டிக் குழுக்கள் இருப்பது குறித்து ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதனால், கட்சிச் சின்னம் தொடர்பாக முடிவெடுக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் முடிவடைவதால், தற்போதைக்கு கட்சிச் சின்னம் தொடர்பாக மட்டும் முடிவெடுப்பது என ஆணையம் தீர்மானித்ததாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்