ஓ. பி. எஸ்.தரப்புக்கு இரட்டை விளக்கு கம்பம், சசிகலா தரப்புக்கு தொப்பி: சின்னங்கள் ஒதுக்கீடு

  • 23 மார்ச் 2017

அ.தி.மு.கவின் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்குக் கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கம்; அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை

அதிர்ச்சியளிக்கும் முடிவு: ஓ.பி.எஸ்

அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் கோரியதால் அந்தச் சின்னத்தை நேற்று தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சிப் பெயரையும் இரு தரப்பும் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியது.

புதிய சின்னத்தையும் புதிய பெயரையும் இன்று காலை தெரிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், இரு தரப்பும் தங்களுக்கு விருப்பமான பெயர்கள், சின்னங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகின.

இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

கட்சிப் பெயரைப் பொறுத்தவரை, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக - புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரைத் தேர்வுசெய்திருக்கிறது.

"இரட்டை இலையைப் போலவே இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பத்தை தேர்வு செய்தது ஓ. பன்னீர்செல்வத்தின் புத்திசாலித்தனம்" என மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Image caption ஓ. பி. எஸ்.மற்றும் சசிகலா தரப்புக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு

அதேபோல, சசிகலா அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்தார். அதிமுக - அம்மா என்ற பெயரில் தங்கள் பிரிவு அழைக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கட்சிச் சின்னத்தையும் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்றாலும் இடைத்தேர்தலுக்காக இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதாக தம்பிதுரை கூறியிருக்கிறார்.

இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை: டிடிவி தினகரன்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டுமெனக் கோரி, சசிகலா அணியும் பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால், சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்