சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

  • 23 மார்ச் 2017

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.

படத்தின் காப்புரிமை Tndipr

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாததால், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மு.க. ஸ்டாலின், சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லையென குற்றம் சாட்டினார்.

இதற்குப் பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஸ்டாலின் கோரினார்.

அதன்படி, எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் 97 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பை புறக்கணித்தனர்.

தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்: சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக எதிர்ப்பு

இரட்டை இலை சின்னம் முடக்கம்; அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை

இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சபாநாயகர் தனபால் அவை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கவில்லை. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை நடத்தினார்.

தமிழக முதல்வராக சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்ற பிறகு, அவரது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

மு.க. ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் நடுநிலைமையோடு நடந்துகொள்ளவில்லயென்று கூறி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான கடிதத்தை பிப்ரவரி 21ஆம் தேதியன்று சட்டப்பேரவை செயலகத்தில் அளித்தார் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்