உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

உத்தரப் பிரதேசத்தில், பாரதீய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்று சமீபத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதனுடைய தாக்கம், இறைச்சிக் கடைகள் வரை எதிரொலித்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக்கியதன் பின்னணி என்ன?

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

Image caption காஜியாபாதில் சுமார் 100 இறைச்சி விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், அரசு நிர்வாகம், இறைச்சிக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது.

காஜியாபாதின் கேலா பட்டா பகுதியில் மட்டும் சுமார் 100 இறைச்சி விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பிரியாணி, குருமா விற்பனை செய்யும் சிறிய உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

இறைச்சிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

"வெட்டப்பட்ட எருமை இறைச்சிகளை வைத்திருந்தோம். திடீரென்று வந்த காவல்துறையினர் எங்களிடம் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்துவிட்டனர். என்ன செய்வது என்று புரியவில்லை. கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. இதுகுறித்த எந்த முன்னெச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை" என்று உள்ளூர்வாசியான யாசின், பி.பி.சி செய்தியாளர் வினித் கரேவிடம் கூறினார்.

"நாங்கள் இறைச்சி விற்பனை செய்து எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். எங்கள் குழந்தைகளும் இதே தொழிலில்தான் உள்ளனர். எங்கள் வாழ்வாதாரமே சிக்கலாகிவிட்டது" என்று யாசின் வருத்தப்படுகிறார்.

"இறைச்சி வெட்டுவதற்கான இடத்தையும், உரிமத்தையும் அரசு எங்களுக்கு கொடுக்கட்டும். எதுவுமே செய்யாமல் தடை மட்டும் விதித்தால் என்ன செய்வது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

"அதே பகுதியில் உணவகம் நடத்தும் முக்தார் அஹ்மத், "எங்கள் கடைக்கு வந்த காவல்துறையினர், வேலை செய்துக் கொண்டிருந்த எட்டு பேரையும் வெளியேற்றிவிட்டு, கடையை மூடிவிட்டார்கள். இப்போது எல்லோரும் நடுத்தெருவில் நிற்கிறோம். எங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை" என்று திகைத்து நிற்கிறார்.

'இனி பிரியாணி விற்க முடியாது'

"அரசு மாறிவிட்டது. இனி இறைச்சிகளை தடை செய்வார்கள், பிரியாணியும் விற்கமுடியாது" என்று கேலா பட்டா பகுதியில் பிரியாணிக் கடை நடத்திவரும் மொஹம்மத் ஆஜம் ஆதங்கப்படுகிறார்.

அந்தப்பகுதியில் 25 ஆண்டுகளாக ஹலீம் பிரியாணி விற்பனைக் கடையை நடத்தும் அஜி, "இனி நாங்கள் வேலையில்லாதவர்கள், ஒன்றுமற்றவர்கள், இப்படியே இருக்கவேண்டியது தான்" என்று சொல்கிறார்.

"நாங்கள் உழைத்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகள். இனிமேல், எனது மனைவி-மக்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

நாங்கள் தினமும் காலை உணவை இங்குதான் சாப்பிடுவோம். இனி என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை என்று பல்மருத்துவ மாணவரும், உள்ளூர்வாசியுமான ஷமீம் அஹமத் வருத்தப்படுகிறார்.

இப்போது இறைச்சிக்கடைகளையும், மாமிச உணவு விற்பனை செய்யும் கடைகளையும் மூடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் பக்ரீத் பண்டிகை வருமே? அப்போது நாங்கள் என்ன செய்வோம்? பக்ரீத் கொண்டாடக்கூடாதா?" என்று கேட்கிறார்.

அரசு நிர்வாகம் இவர்களுக்கான மாற்று யோசனைகள் எதையுமே தரவில்லை. இறைச்சிக் கூடங்களை மூடுவது பற்றிய தகவல்களை முன்னதாகவே கொடுத்திருந்தால், எதாவது மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்களின் கடைகள் மட்டுமே ஏன் மூடப்படுகிறது என்று கேள்வி எழுப்பும் அவர்கள், வால்மீகி அமைப்பின் கடைகள் ஏன் மூடப்படவில்லை என்றும் கேட்கின்றனர்.

ஆனால் வால்மீகி அமைப்பின் கடைகளும் மூடப்பட்டிருப்பதாக பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Inpho
Image caption உத்தரப்பிரதேச தலைநகரில் பிரபலமாக உள்ள 'கபாப்' வகை உணவுகள்

கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலையில், அதற்காக அரசு என்ன செய்யவிருக்கிறது என்று கேள்வி கேட்கிறார் முகமது தாஹிர்.

கடைகளை மூடுவது மாவட்ட நகராட்சிதான் என்று காஜியாபாத் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து காஜியாபாத் எஸ்.டி..எம் சதர் அதுல் குமாரிடம் பி.பி.சி செய்தியாளர் கேட்டதற்கு அவர் அளித்த பதில் - "வீடுகளில் எருமைகள் வெட்டப்படுவதாக மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்தே, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. வீடுகளில் இறைச்சி வெட்டுவது சட்டவிரோதமானது. இறைச்சி வெட்டுவதற்கான தனியிடங்கள் இருக்கும் போது, வீடுகளில் இறைச்சி வெட்டுவதற்கு அனுமதி கிடையாது".

இங்கிருக்கும் பல கடைகள், உரிய உரிமங்கள் இல்லாமல் செயல்படுவதை மக்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக உரிமங்களை பெற முயற்சிகள் எடுத்தபோதிலும், அவை கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய பாரதீய ஜனதா அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டும் நிலையில், இது, மதங்களுக்கு அப்பாற்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைதான் என்பதை நிரூபிப்பது அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்