பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியவரை துரத்திப் பிடித்த வீதி நாய்கள்!

யார் மீதாவது கடுமையான கோபம் ஏற்பட்டால், அவர்களை வீதியில் திரியும் நாய்களுக்கு ஒப்பாகப் பேசுவது சிலரது வாடிக்கை. ஆனால், சென்னையைச் சேர்ந்த இரண்டு நாய்களின் வீரமான செயல், அப்படிப் பேசுவோரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை S.RAMAN
Image caption `வீரம் மிக்க நண்பர்களுடன்'ஆட்டோ ஓட்டுநர் ராமன்

ஓர் ஆட்டோ டிரைவரின் செல்லப் பிராணிகளான, வீதியில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள், ஒரு பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு ஓடிய நபரை துரத்திப் பிடிக்க உதவியிருக்கின்றன.

சாலையில் சென்று கொண்டிருந்த தனது முன்னாள் சக ஊழியரை தாக்கியவரை துரத்திப் பிடித்துக் கொடுத்தன இரண்டு தெரு நாய்கள். நாய்களால் துரத்தப்பட்டு, கடிக்கப்பட்ட அந்த மனிதரை பொதுமக்களும், நாய்களை பாதுகாப்பவருமான ஆட்டோ டிரைவரும் பிடித்துவிட்டனர்.

சென்னையின் பிரபலமான குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதியான மேற்கு மாம்பலத்தில் இருந்து காலை சுமார் 6.30 மணிக்கு பணிக்குக் கிளம்பிய சுசிஸ்மிதாவை வழிமறித்து கத்தியால் குத்தினார் 23 வயதான ஆர்.ரகுநாத்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சுசிஸ்மிதா கொடுத்த புகாரால், தான் வேலையிழந்த்தால், அவரை பழிவாங்கவே ரகுநாத் கத்தியால் குத்தியதாக கூறப்பட்டுள்ளது. .

சுசிஸ்மிதாவின் வயிற்றில் ரகுநாத் கத்தியால் குத்தியதும், அவர் அலற ஆரம்பித்தார். உடனே ரகுநாத் ஓட ஆரம்பிக்கவும், பப்பி என்று செல்லப் பெயர் கொண்ட அந்த இரு நாய்களும் ரகுநாத்தை துரத்திச் சென்றன. அவரது கால்களை கடித்தன.

"கடிபட்ட ரகுநாத்தால் அதிக தூரம் ஓடமுடியவில்லை, நாய்களின் மேல் அவரது கவனம் திரும்பியது. அப்போது நானும், மற்றவர்களும் சேர்ந்து ரகுநாத்தைப் பிடித்துவிட்டோம். பிறகு காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டோம்," என்று பி.பி.சி.யிடம் தெரிவித்தார் வீதியில் திரியும் நாய்களை பாதுகாக்கும் ஆட்டோ ஓட்டுநர் எஸ்.ராமன்.

`மனிதர்களின் மன அழுத்தத்தை உணர்ந்து கொள்ளும் நாய்கள்'

"நாய்களின் இந்த நடவடிக்கை ஆச்சரியமானதல்ல" என்கிறார் பெங்களூருவை சேர்ந்த நாய்களுக்கான ஆலோசகர் நதாஷா சண்டி.

தெருவில் இருக்கும் நாய்கள் மிகவும் கூர்மையான உள்ளுணர்வு கொண்டவை. நாய்கள் மன அழுத்தத்தை உணர்ந்து கொள்பவை என்று ஆழமான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் உடல்மொழிகளையும் புரிந்துக்கொள்ளும் அவை, மக்களின் நடத்தைகளையும் கூர்ந்து கவனிக்கின்றன.

இந்த விசயத்தில், ஏதோ தவறாக நடப்பதை அவை உணர்த்து கொண்டு, குறிப்பாக ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு வலியால் அலறுவதைக் கேட்டு அவை தாக்கியவரை துரத்தத் தொடங்கிவிட்டன என்கிறார் அவர்.

"பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவே நாய்கள் முயலும். ஆனால் இதில் தாக்கியவர் ஓட முயன்றதும் அவரைத் துரத்தத் தொடங்கிவிட்டன," என்கிறார் சண்டி.

ஆனால், இந்தியாவில் தெரு நாய்கள் மிகவும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில்30 மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆண்டுதோறும் ரேபிஸ் நோயின் பாதிப்பால் சுமார் 20 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய்க்கு தெரு நாய்கள் தான் காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.

இது குறித்து வருத்தம் தெரிவிக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள், தெரு நாய்களால் மக்கள் இறப்பதை விட, 1993 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு தீவிரவாத தாக்குதல்களில் அதிக மக்கள் கொல்லப்பட்டதை (422 பேர்) சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால், ராமனின் பப்பிகள் எழுதியதோ வித்தியாசமான கதை, அதற்கு காரணம் ரகுநாத்தின் நடத்தை.

சுசிஸ்மிதாவிற்கு தொந்தரவு கொடுத்த ரகுநாத் கடந்த ஆண்டு தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது வேலை பறிபோக சுசிஸ்மிதாவே காரணம் என்று குற்றம் சாட்டினார் அவர். இதுகுறித்து உள்ளூர் நாளிதழில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், நிறுவனத்தின் பேருந்தில் ஏறும்போது, ரகுநாத் தேவையில்லாமல் தன்னை தொட்டதாக சுசிஸ்மிதா குற்றம் சாட்டியிருந்தார்.

அதே நிறுவனத்தின் வேறு கிளையில் பணிபுரியும் தனது தந்தையிடம் இது குறித்து சுசிஸ்மிதா அளித்த புகார், உயர் அதிகாரிகளிடம் சென்று, ரகுநாத் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு, வயிற்றில் காயமடைந்த சுசிஸ்மிதா, இப்போது உடல்நிலை தேறிவருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்