யோகியின் அதிரடியால் சிங்கங்களுக்கும் சிக்கல்: விருப்பமோ மாடு, கிடைப்பதோ ஆடு!

  • 25 மார்ச் 2017

சட்டவிரோதமான இறைச்சிக்கூடங்களை மூடும் உத்தரப்பிரதேச அரசின் முடிவு, மனிதர்களையும் தாண்டி விலங்குகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இடாவாவில் சிங்கங்களுக்கான வனப்பகுதியில், அவற்றிற்கான உணவுக்கும் சிக்கல் வந்துவிட்டது. ஏற்கெனவே அரிதாகி வரும் விலங்குகளில் ஒன்றான சிங்கங்களுக்கு பிடித்த உணவு கிடைக்காமல் வருந்தமடைந்துள்ளனவாம்.

வழக்கமாக சிங்கங்களுக்கு எருமை மாட்டிறைச்சி கொடுக்கப்படும். ஆனால் மாறிவரும் சூழலில் அவற்றுக்கு ஆட்டிறைச்சியே கொடுக்கப்படுகிறது.

இடாவாவில் சிங்கங்களுக்கான வனப்பகுதியில் ஆறு இளம் சிங்கங்களும் இரண்டு குட்டிகளும் என மொத்தம் எட்டு சிங்கங்கள் இருக்கின்றன என்று இயக்குனர் அனில் குமார் படேல் தெரிவித்தார். அவற்றிற்கு மாட்டிறைச்சி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு-மூன்று நாட்களில் மாட்டிறைச்சி தட்டுப்பாட்டினால், ஆட்டிறைச்சியும், கோழி இறைச்சியுமே கொடுக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இது இடாவாவின் பிரச்சனை மட்டுமல்ல, லக்னெள மற்றும் கான்பூரில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் உள்ள சிங்கங்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால், இந்த பிரச்சனை விரைவில் சீர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பமுடிகிறதா? தற்கொலையைத் தடுக்கும் மின்விசிறி!

"மாட்டிறைச்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், சிங்கங்களுக்காக தினமும் 50 கிலோ ஆட்டிறைச்சி கொடுப்பதே சிக்கலாக இருக்கிறது, மீதமுள்ளவை கோழி இறைச்சியாக கொடுக்கப்படுகிறது" என்கிறார் இடாவாவில் சிங்கங்களுக்கான இறைச்சிகளை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர் ஹாஜி நிஜாம்.

Image caption யோகி ஆதித்யநாத்

யோகிக்கு யோசனை

சிங்கங்கள் பட்டினியால் வாடக்கூடாது என்பதால் தான் அங்கு இறைச்சியை தொடர்ந்து கொடுக்கிறோம். ஆனால் இது எத்தனை நாளைக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை என்கிறார் அவர். மனிதர்களை விடுங்கள், சிங்கங்களுக்காகவது மாட்டிறைச்சியை கொடுங்கள் என்று மாநில அரசிடம் கோரிக்கையும் வைக்கிறார் அவர்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் சொந்தத்தொகுதி இடாவா. இங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, முலாயமும், அகிலேஷும் நிறைய செய்துள்ளார்கள். அகிலேஷ் கனவுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். இங்கு இருந்த சிங்கங்களில் பல இறந்துபோனதால், கனவுத்திட்டம் சர்ச்சைக்குரிய திட்டமானது.

இடாவாவில், சிங்கங்களுக்கான வனப்பூங்காவின் ஏற்பாடுகளை கவனிக்க முதலமைச்சர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதைத் தவிர, மாநில வனத்துறை அதிகாரி ஒருவரும் இந்தக்குழுவில் இடம் பெற்றிருப்பார்.

இந்த வனப்பூங்காவின் பராமரிப்புக்காக சமாஜவாதி கட்சி நூறு கோடி ரூபாய் வைப்பு நிதியை ஏற்படுத்தியது. இந்த வைப்புத் தொகையில் இருந்து வரும் வட்டியின் மூலம் வனப்பகுதியின் பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும், இடாவா வனப்பூங்காவின் எதிர்காலத்தை லக்னெளவின் புதிய முதலமைச்சர் முடிவு செய்யட்டும். ஆனால், ஏற்கனவே மாறி வரும் பருவநிலை மற்றும் நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அருகி வரும் சிங்கங்களுக்கான ரேஷனும், இறைச்சிக் கூடங்களின் தடையால் தடைப்படக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்