`விலங்குகளை வெட்டுவது மட்டும்தான் முஸ்லிம்கள், மற்றதெல்லாம் ஹிந்துக்கள் வேலை'

உத்தரப் பிரதேசத்தில், இறைச்சிக்கூடங்கள் மற்றும் தோல் தொடர்பான தொழில்களில் முஸ்லிம்களை விட அதிக அளவில் ஹிந்துக்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை BBCPERSIAN.COM

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

பாரதீய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, காஜியாபாத் உட்பட பல நகரங்களில் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. அவர் பதவியேற்றதும், சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்களை மூடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைச்சிக்கூடங்களை மூடுவதால் அதிக பாதிப்படைவது தலித்துகளாகத்தான் இருக்கும். தோல் தொழில் அவர்களின் பரம்பரைத் தொழில். காலம்-காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரம், அரசின் அண்மை நடவடிக்கைகளால் பாதிக்கும் என்று மீரட் பல்கலைக்கழக பேராசிரியர சதீஷ் பிரகாஷ், பி.பி.சியிடம் தெரிவித்தார்.

யோகி அரசின் அதிரடியால் சிங்கங்களுக்கும் சிக்கல்!

வேளாண் துறை தரவுகளின்படி, நம் நாட்டில் உள்ள 75 இறைச்சிக் கூடங்களில் 38 உத்தரப்பிரதேசத்தில்தான் இருக்கிறது.

மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், (APEDA), இந்த இறைச்சிக் கூடங்களுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது.

இந்த இறைச்சிக் கூடங்களில் விலங்குகளை வெட்டும் வேலையை மட்டும்தான் முஸ்லிம்கள் செய்கிறார்கள், மற்ற வேலைகள் அனைத்தையும் ஹிந்துக்கள்தான் செய்கிறார்கள்" என்று அல்-ஹிந்த் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் லியாகத் பி.பி.சியிடம் கூறினார்.

உண்மையில், இந்தப் பகுதியில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதில் 75 சதவிகிதத்தினர் ஹிந்துக்கள்தான்" என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Thinkstock

`அதிக பாதிப்பு ஹிந்துக்களுக்குத்தான் '

ஆனால், விவகாரம் இப்போது முற்றிவிட்டது. விலங்குகளை வளர்ப்பவர்களும் எல்லா இனத்தையும் சேர்ந்தவர்கள். எனவே இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஹிந்துக்களாகத்தான் இருக்கும்.

தோல் தொழில் இலட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்தத்தொழிலில் அவர்கள் ஏகபோகமாக இருக்கிறார்கள். இந்தத் தொழிலால் உத்தரப்பிரதேச மாநில தலித்துகளின் பொருளாதார நிலை மேம்பட்டு, அவர்களின் கையிலும் நாலு காசு சேர்ந்தது" என்கிறார் சதீஷ் பிரகாஷ்.

ஹாபுட் சந்தையில் இருந்து தோல் வாங்கிவரும் அவர்களுக்கு காவல்துறையினரின் கெடுபிடியும் உண்டு. வன்முறைகளுக்கும் ஆளாவார்கள். எதிர்காலத்தில் இது தலித்துகளின் மீதும் நடக்கும். அவர்கள் மேலும் அதிக பிரச்சனைக்கு உள்ளாகலாம் " என்று அவர் மேலும் கூறுகிறார்.

கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பால் தொழிலில் இலட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

இரண்டு-மூன்று முறை கன்று ஈன்ற பிறகு, பசுக்களும், எருமைகளும் பயனற்றுப் போய்விடுகின்றன. அவற்றின் பராமரிப்புக்காக மாதம் ஒன்றுக்கு 400 ரூபாய் செலவாகும் நிலையில், அவற்றை விற்று வரும் பணத்தைக் கொண்டு கால்நடை வளர்ப்போர் வாழ்க்கை நடத்துவார்கள். விலங்குகளை வாங்க ஆள் இல்லையென்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? அந்த கால்நடைகளின் கதி?

மாநிலத்தில் சட்டவிரோதமான இறைச்சிக் கூடங்களும் உள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்பதாலேயே இவர்களுக்கு உரிமம் கொடுக்கப்படவில்லை.

உரிமம் வைத்திருப்பவர்களில் பலருக்கு அது 2017 ஆம் ஆண்டுடன் முடிந்துவிடும். மற்றவர்களின் உரிமங்கள் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் முடிந்துவிடும்.

படத்தின் காப்புரிமை Reuters

"உரிமம் காலாவதியானதும் அவை புதுப்பிக்கப்படுமா?" என்று லியாகத் அலி கேள்வி எழுப்புகிறார். "இல்லாவிட்டால், அதற்கு பிறகு அவர்களும் சட்டவிரோதமானவர்களாகவே கருதப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கவலையை வெளியிடுகிறார் லியாகத்.

சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவது தவறில்லை என்கிறார் இந்திய உணவுகள் ஏற்றுமதி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் அஷோக் யாதவ்.

ஏற்றுமதி குறையும்

எவ்வளவு பெரிய நன்மை அளிப்பதாக இருந்தாலும் சரி, சட்டவிரோதம் என்பதை ஒத்துக்கொள்ளமுடியாது, அது தவறுதான். அவற்றை மூடுவதை தவறில்லை என்று அவர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.

"உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது, ஆனால் கடந்த காலத்தில் அது இரண்டாவது இடத்தில் இருந்தது. 2017-18 ஆம் நிதியாண்டில் பிரேசிலை முந்திவிடும்" என்று நம்பப்பட்டதாக மாட்டிறைச்சி வணிகம் செய்பவர்களுக்கான வலைதளம் beef2live.com கூறுகிறது.

மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு ஆண்டொன்றுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது அதில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்.

இதைத் தவிர, உள்நாட்டில் மாட்டிறைச்சி விற்பனை சுமார் 3000 கோடி ரூபாய் என்றாலும், அதில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு மிகவும் குறைவுதான்.

`உத்தம’ பிரதேசத்தில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”

மாட்டிறைச்சி உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளிலும் மாட்டிறைச்சி அதிக அளவு நுகரப்படுகிறது.

மாட்டிறைச்சித் தொழில், தோல் தொழிலையே சார்ந்திருக்கிறது. மாட்டிறைச்சி தொழிலை பொறுத்த அளவில் உத்தரப்பிரதேசம் நாட்டில் முதலிடம் வகிக்கிறது. இங்கு சிறிதும்-பெரிதுமாக சுமார் 11 ஆயிரம் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக கான்பூர் மற்றும் ஆக்ராவிலேயே அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

10 மில்லியன் மக்களுக்கு வேலை

வர்த்தக அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் சுமார் 20 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது மாட்டிறைச்சித் தொழில். நேரடியாக மற்றும் மறைமுகமாக உத்தரப் பிரதேசத்தில், இந்தத் துறையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் இணைந்துள்ளனர்.

"தோல்களை நீக்கி சுத்தப்படுத்துவது, இரசாயனம் பயன்படுத்தி தோல் பதப்படுத்துவது போன்ற பணிகளில் தலித்துகள் ஈடுபட்டுள்ளனர். தோல் பொருட்களை தயாரிப்பதில் அவர்கள் திறமையானவர்கள், அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்" என்று சதீஷ் பிரகாஷ் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை BBCPERSIAN.COM

தோல் தொழிலில் நாடு முழுவதும் 5,322 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, 2014-15 ஆம் ஆண்டில் தோல் பொருட்களின் ஏற்றுமதி 94.20 கோடி டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் தோல் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

"இறைச்சி அல்லது இறைச்சிக்கூடங்கள் என்பது மட்டுமே இங்கு சிக்கலை எதிர்கொள்ளவில்லை. பல தொழில்கள் இதனை சார்ந்துள்ளன. பலரின் வாழ்வாதரமும் சிக்கலை எதிர்கொள்கிறது. இனி அவர்கள் என்ன செய்வார்கள்?".

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

"நாங்கள் குறிவைக்கப்படுகிறோம் என்று சொல்லும் லியாகத், இந்தத் தொழிலில் பலதரப்பட்ட மக்கள் ஈடுபட்டிருந்தாலும், எங்கள் சமுதாயம் மட்டுமே குறிப்பாக சுட்டிக்காட்டப்படுகிறது. இருந்தாலும், அரசுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கவேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். முதலமைச்சரின் நோக்கத்தை இப்போதே கேள்விக்கு உட்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் இறைச்சிக் கூடங்களுக்கு இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை. எனவே, அரசின் செயல்பாட்டை விமர்சிப்பது நியாயமில்லை என்கிறார் அஷோக் யாதவ்.

ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பொருளாதார மற்றும் தொழில்ரீதியாக இலட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்தத் தொழிலின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதிக கவனமாக இருக்கவேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்