மொபைல் தொலைபேசி இணைப்புப்பெற கட்டாயமாகிறது ஆதார் எண்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மொபைல் தொலைபேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Inpho

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கும் புதிய நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் (PAN) பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது மொபைல் தொலைபேசி இணைப்புப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் தொலைத் தொடர்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பீரிபெய்டு, போஸ்ட்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் அனைவரின் விவரங்களையும் ஆதார் எண் விவரங்களோடு பொருத்த சரிபார்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்துக்குள் இந்தப் பணிகளை செய்து முடிக்குமாறு அந்த நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

புதிய சிம் கார்டு பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இகேஒய்சி எனப்படும் எலக்ட்ரானிக் முறையிலான, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற முறை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும்.

ஏற்கெனவே அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்த ஆதார் எண், தற்போது அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டாயமாக்கப்படுவதன் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஜூலை 1 முதல், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போதும், புதிய நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் கோரி விண்ணப்பிக்கும்போதும் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தற்போது நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் வைத்திருப்போர், அரசு பின்னர் அறிவிக்கும் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும். தவறினால், நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் ரத்து செய்யப்படும்.

ஆதார் விவரம் சரிபார்க்கப்படாத அல்லது உறுதி செய்யப்படாத எந்த ஒரு மொபைல் தொலைபேசி எண்ணும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாகிவிடும்.

படத்தின் காப்புரிமை Thinkstock

தன்னார்வ நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில், இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி எண்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, தொலைபேசி சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில், ஆதார் கார்டு எண் பிரதிநிதிகள், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றதாக தொலைத் தொடர்புத்துறை அறிவிக்கை கூறுகிறது.

தற்போதுள்ள மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை குறித்து அனத்து சாதகமான வழிகளிலும் தெரிவிக்குமாறு தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்படக்கூடாது என முன்பு இடைக்கால உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக இன்னும் இறுதித் தீர்ப்பு வெளியாகவில்லை.

ஆதார் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கிய சட்டத்திலும், இதன் பயன்பாடு கட்டாயமாக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்