போராடி வரும் தமிழக விவசாயிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை: மு.க.ஸ்டாலின்

  • 26 மார்ச் 2017

விவசாயிகளின் நலன் கருதி வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக தமிழக அரசு ஏற்கனவே கோரியிருக்கும் 62 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைMKSTALIN

புதுடில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் நலன் மீது அக்கறை காட்ட மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டும் செய்தி அறிக்கை ஒன்றை மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள் என்றும் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், குற்றவாளி வழிகாட்டுதலில் செயல்படும் தமிழக அரசு, விவசாயிகளின் டில்லிப் போராட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது என்பது பற்றிய வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருப்பது, இந்த அரசுக்கு விவசாயிகள் நலன் பற்றி சிறிதும் அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என கூறி அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு உடனடியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது "இடைத்தேர்தல் பிரச்சாரத்தை" ரத்து செய்து விட்டு, புதுடில்லிக்குச் சென்று, போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேச வேண்டும் என்றும், அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.

புதுடில்லியில் போராடும் விவசாயிகளை ஓடோடிச் சென்று சந்தித்து, உரிய வாக்குறுதிகளை அளித்து, விவசாயிகளை திரும்பவும் பத்திரமாக அழைத்து வந்திருக்க வேண்டிய முதலமைச்சர், "பெரா" குற்றவாளிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு கேட்பதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வெட்கக் கோடாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்