எதிர்ப்புக்கு மத்தியில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது

  • 27 மார்ச் 2017

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அந்தத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம், இன்று டெல்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கையெழுத்தானது.

படத்தின் காப்புரிமை PIB
Image caption ஒப்பந்தம் கையழுத்தான நிகழ்வில்

நாடு முழுவதும், கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் 2016 திட்டத்தில், 31 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம், 46 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியை 10 சதம் குறைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் இலக்கை அடையும் ஒரு படியாக இத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம், ஜெம் லெபாரட்ரீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Image caption போராட்டக் களம் (கோப்புப்படம்)

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது. அது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதுடன், விவசாயத்தின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று போராட்டத்தினர் அச்சம் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களுடன் மத்திய இணை அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, தமிழக அரசு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கவலைகளைத் தீர்த்த பிறகுதான், அத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.

நெடுவாசலில் 16-வது நாளாக தொடரும் போராட்டம்; ஸ்டாலின் நேரில் ஆதரவு

Image caption போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

இந் நிலையில், இன்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரதான், ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது இன்னொரு கட்டம். அதற்கு முன்னதாக, மத்திய அரசும், தமிழக அரசும், உள்ளூர் மக்களுடன் இணைந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தும். அதில், அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி தெளிவு ஏற்பட்ட பிறகே திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந் நிலையில், தங்கள் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைத்திருந்த நெடுவாசல் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வேலு, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசிய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை DIPR
Image caption முதல்வரிடம் கோரிக்கை (கோப்புப்படம்)

"ஏற்கெனவே, அமைச்சர் பிரதானைச் சந்தித்துப் பேசியபோது, மக்களின் விருப்பம் இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படாது என்று உறுதியளித்திருந்தார்," என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஏற்கெனவே, போராட்டக் குழுவினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசியபோது, விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என உறுதியளித்ததாகத் தெரிவித்தனர்.

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு முதல்வர் உறுதி

அதே நேரத்தில், பெட்ரோலியத்துறை அமைச்சகம் இத் திட்டம் தொடர்பாக அளித்த விளக்கத்தில், இத் திட்டத்தை அமல்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிவித்திருந்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை: அரசு விளக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்