வந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா? முஸ்லிம் உறுப்பினர்களுக்கு தர்மசங்கடமா?

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகராட்சியில், வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

நகராட்சி மேயரின் முன்னிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் தேசிய பாடலை (தேசப்பாடல்) பாடுவது கட்டாயம் என்ற முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.

வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவதற்கு எதிர்கட்சிச் கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில், கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய பாடலான வந்தேமாதரத்தை பாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தேசிய பாடலை பாடாத உறுப்பினர்கள், கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கூடாது என்றும், அவர்களின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உத்தர பிரதேசத்தில் பெண்களை காக்கும் ஆண்டி ரோமியோ படை

இந்த செய்தியும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

நகராட்சி மேயர் அஹ்லூவாலியாவின் தலைமையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றிய மேயர், இது சட்டமாக்கப்படும் என்ற கூற்றை மறுத்தார். ஆனால், இது முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. எனவே இதை சட்டமாக்கினாலும் தவறு இல்லை என்று சொன்னார்.

பி.பி.சியிடம் பேசிய ஹரிகாந்த் அலுவாலியா, "தேசப்பாடலை பாடும்போது சிலர் வெளியே சென்றுவிடுகிறார்கள். பிறகு உள்ளே வந்து அமர்கிறார்கள். இது தேசிய பாடலை அவமானப்படுத்துவதுதான். எனவே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்று சொன்னார்.

"தீர்மானத்தை கொண்டு வந்ததும், நிறைவேற்றியதும் பெரும்பான்மை உறுப்பினர்கள். நகராட்சியின் தலைவர் என்ற முறையில், பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டியது எனது கடமை" என்று அவர் மேலும் சொன்னார்.

இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?

உண்மையிலேயே, நகராட்சிக் கூட்டங்களில் முதலில் தேசியப் பாடல் (தேசப்பாடல்) பாடும் வழக்கம் நடைமுறையில் இருப்பது தான்.

ஆனால், இஸ்லாமிய கவுன்சிலர்கள் சபையிலிருந்து வெளியேறி, பாடல் முடிந்தவுடன் மீண்டும் உள்ளே வந்துவிடுவார்கள். இது குறித்த விவாதங்கள் எதுவும் இதுவரை எழுந்ததில்லை.

படத்தின் காப்புரிமை AFP

நகராட்சியின் தற்போதைய காலம் இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பாரதீய ஜனதா கட்சியினர் வேண்டுமென்றே சிக்கல் எழுப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியல் லாபத்துக்காகவா?

நகராட்சிமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினருமான ஷாஹித் அப்பாஸி, "தேசிய பாடல் பாடும்போது, நாங்கள் எழுந்து நிற்கிறோம், ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தையும் எழுப்புகிறோம். ஆனால், பாரதீய ஜனதா கட்சி, இதை வேண்டுமென்றே விவகாரமாக மாற்றுகிறது"என்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

உத்தரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்த பிறகே, இந்த பிரச்சனை எழுப்பப்படுகிறது என்று ஷாஹித் அப்பாஸி கூறுகிறார்.

அவரது கருத்தின்படி, "மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு நகராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சனையை, நகராட்சி தேர்தலில் பயன்படுத்தும் நோக்கில் இந்த பிரச்சனை எழுப்பப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக யாரையும் மன்றத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது உள்ளே வரத் தடையோ விதிக்கப்படவில்லை என்று மேயர் அலுவாலியா கூறுகிறார்.

"என் மகன் விட்டுச் சென்ற பிரசாரத்தை தொடர்வேன்": ஃபாரூக்கின் தந்தை

இருந்தபோதிலும், தேசிய பாடலுக்கு அவமரியாதை செய்பவர்களை எந்தக் காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளமுடியாது என்று அவர் சொல்கிறார்.

ஷாஜித் அஹ்மத் சொல்கிறார், "நாங்கள் வந்தே மாதரம் இசைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து வெளியில் எழுந்து செல்கிறோம்.

நகராட்சியின் பல உறுப்பினர்கள் இந்த கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யப்போவதாகவும் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

"கட்டாயமாக திணிப்பதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது குறித்து உச்ச நீதிமன்றம் சட்டப்படி தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து நகராட்சி எப்படி கட்டுப்பாடுகள் விதிக்கமுடியும்?", என்று ஷாஹித் அப்பாஸி கேள்வி எழுப்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்