ரஜினிகாந்த் - மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் சந்திப்பு

  • 31 மார்ச் 2017

மலேசியப் பிரதமர் நஸீப் ரஸாக், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Image caption மனைவி, மகளுடன் மலேசிய பிரதமரைச் சந்தித்தார் ரஜினிகாந்த்

மலேசியப் பிரதமர் நஸீப் ரஸாக் ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மலேசியாவிலிருந்து நேரடியாக சென்னை வந்த அவர் சென்னையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று காலையில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தனது மனைவி ரோஸ்மா மன்ஸூருடன் பிரதமர் நஸீப் ரஸாக் வருகை தந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கபாலி படத்தின் படப்பிடிப்பு 2 மாதங்கள் மலேசியாவில் நடைபெற்றபோது அரசுத் தரப்பிலிருந்து நல்ல ஒத்துழைப்புத் தரப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை பயணம் ரத்து: குழப்பத்தில் ரஜினி?

அதற்காக பிரதமரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினாலும், அந்தத் தருணத்தில் பிரதமருக்கு நேரமில்லாததால் சந்திக்க முடியவில்லை என்றும் தற்போது அவர் சென்னை வந்திருப்பதை அறிந்து அவரை தன் இல்லத்திற்கு அழைத்ததாகவும் ரஜினிகாந்த் கூறினார்.

கபாலி படத்தின் சில காட்சிகளை அவருக்குத் திரையிட்டுக் காட்டியதாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Image caption செல்ஃபி விஐபி.க்கள்

மலேசியாவின் சுற்றுலாத் தூதராக இருக்கும்படி கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அது உண்மையல்ல என்று ரஜினி பதிலளித்தார்.

ரஜினி நடிக்கும் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; ஷங்கர் வருத்தம்

மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பல காலம் ஆகிவிட்டதால் ஏப்ரல் 11 முதல் 16 வரை அவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போவதாகவும் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவிருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினி இலங்கைக்குச் செல்லவிருந்த பயணம் சர்ச்சைக்குள்ளானது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

இந்த சந்திப்பு குறித்து மலேசியப் பிரதமர் நஸீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை யாருக்குத்தான் தெரியாது? அவரை இன்று நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்றும் "தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பு நட்புணர்வுடன் இருந்தது" என்றும் கூறியிருக்கிறார்.

காணொளி:

போராடி வென்ற ரஜினி ரசிகர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்