மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை

  • 31 மார்ச் 2017

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்ததும், மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சிங், சந்திரஜித் யாதவ்வின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்தார்.

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சில ஆசிரியர்களின் சதியினால் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சுரேகா தோமர் கூறுகிறார்.

பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா?

வளரும் நாடுகளில் வெட்கத்துக்குரிய பிரச்சனையாக மாதவிடாய்

இந்த மாதம் 29 ஆம் தேதி கஸ்தூரிபாய் காந்தி உறைவிடப் பள்ளியில் துப்புரவு பணி மேற்கொள்வது குறித்த விவகாரத்தில் விடுதி கண்காணிப்பாளரின் தலைமையில் மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டபோது அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதாக, கதெளலி காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சி.குப்த், பி.பி.சியிடம் தெரிவித்தார்.

"மாணவிகளை நிர்வாணப்படுத்தி, சோதனையிட்ட தகவல் கிடைத்தவுடனே, நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு, இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உறைவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பை கேட்டுக்கொண்டோம்"என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோரின் புகார்

சம்பவம் பற்றி மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து, நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். சுமார் 70 மாணவிகள் இப்படி சோதனையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு பிறகு கல்வி அதிகாரியின் தலைமையில் ஏழு உறுப்பினர் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் விடுதி கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகத்தினரின் தூண்டுதலால் தான் மாணவிகள் இவ்வாறு தவறான புகாரை அளிப்பதாக சொல்கிறார்.

விடுதி கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகிறார், "இது ஒரு சதி. நான் இங்கு இருக்க்க்கூடாது என்று இங்கே பணிபுரிபவர்கள் விரும்புகின்றனர்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்