முன்னாள் தலைமைச் செயலருக்கு மீண்டும் பதவி: அரசியல் கட்சிகள் கண்டனம்

  • 31 மார்ச் 2017

வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளானதால் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராமமோகன ராவ். ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்குப் பிறகு தலைமைச் செயலர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராம மோகன ராவ், மத்திய அரசு மீதும் வருமான வரித்துறை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இம்மாதிரி சோதனைகள் நடந்திருக்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், இன்று காலையில் ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலர் நிலையில், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

இந்த நியமனத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு சவால் விட்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எப்படி மீண்டும் பதவி கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "சேகர் ரெட்டிக்கும் ராமமோகன் ராவுக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகமும், வீடும், அவரது மகன்களின் வியாபார நிறுவனங்களும் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி ரெய்டு செய்யப்பட்டன? நேர்மையாளராக கருதப்படும் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எப்படி இப்படியொரு பணி நியமன அரசு ஆணை வெளியிட ஒப்புக் கொண்டார்?" என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நியமனம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் கோரியுள்ளன.

வருமானவரித்துறை சோதனை: மத்திய அரசு மீது ராம மோகன ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்