விலங்குகள் பாதுகாப்பு சட்டம், குஜராத் தலித்துகளை குறிவைப்பதாகக் குற்றச்சாட்டு

  • 2 ஏப்ரல் 2017

குஜராத் மாநில சட்டப்பேரவையில், வெள்ளிக்கிழமையன்று விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2011 நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இனிமேல் குஜராத்தில் மாடுகளை கொன்றாலோ, கடத்தினாலோ, மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனால், இது மாடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் மனிதர்களை குறிவைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக கூறும் குஜராத் மாநில தலித் மக்களின் தலைவர் ஜிக்னேஷ் மேஹானி, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை இலக்கு வைக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்துக்களை திருப்திபடுத்த விரும்புவதாக குறைகூறுகிறார்.

குஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை கவனத்தில் கொண்டு, தற்போது அரசியல் ரீதியான செயற்பாடுகள் தொடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார்.

"குஜராத்தில் இறைச்சிக் கூடமே இல்லாதபோது, மாட்டிறைச்சி அல்லது பசுக்களை கடத்துவது என்ற கேள்வியே இல்லையே?" என்று வினவுகிறார் மேஹானி.

படத்தின் காப்புரிமை Deepak Gupta/Hindustan Times via Getty Images

"தலித்துகள் இனிமேல் தங்களது பரம்பரைத் தொழிலான தோல் தொழில் செய்வதற்காக சந்தையில் இருந்து வாங்கி வந்தால் கூட, அவர்கள் மீது பசுவை கொன்ற குற்றம் சுமத்தி, சிறையில் முடக்கிவிடலாம்" என்று பி.பி.சியிடம் அவர் தெரிவித்தார்.

அரசின் விளக்கம்

குஜராத் மாநில சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் பகவத்சிங் ஜடேஜா, இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்தார்.

குஜராத்தில், மாடுகளைக் கொன்றால் ஆயுள் சிறை

நமது மதம் மற்றும் கலாசார நம்பிக்கைகளின் குறியீடாக விளங்கும் மாட்டை பாதுகாத்தாலே, நம் நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்திவிட முடியும். ஏழை மக்கள் மாட்டை வளர்த்து, அதன் பாலை விற்பனை செய்தும், சாணத்தில் இருந்து உரம் தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாகவும் வருவாய் ஈட்டி, குடும்பச் செலவுகளை சமாளிக்கலாம்.

வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்

குஜராத்தில் தோல் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இங்குள்ள தொழிற்சாலைகள் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றன. இந்தத் துறையில் தலித்துகளின் பங்கு அபரிமிதமாக இருக்கிறது.

"குஜராத் மாநிலத்தில் தோல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் தலித்துகள். தோல் உரிப்பதில் இருந்து, தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் இறுதி கட்டம் வரையிலுமான அனைத்துவிதமான தொழில்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்று தோல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மீரட் பல்கலைக்கழக பேராசிரியர் சதீஷ் பிரகாஷ் கூறுகிறார்.

"சிறை தண்டனைக்கு பயந்து, இனிமேல் தலித்துகள் தோல் உரிப்பது மற்றும் பிற தோல் தொழில்களில் ஈடுபடமாட்டார்கள். கடந்த ஆண்டு ஊனாவில் நடந்த சம்பவத்தை யாரும் மறக்கமுடியாது. தலித்துகளின் தினசரி உணவும், வேலைவாய்ப்புகளும் பறிக்கப்படும், சிக்கல்கள் அதிகரிக்கும்" என்று சொல்கிறார் ஜிக்னெஷ் மேஹானி.

"ஆதாரமற்ற அச்சம்"

இந்த அச்சம் அடிப்படையற்றது என்று மாநில உள்துறை அமைச்சர் ஜடேஜா நிராகரிக்கிறார். "ஊனா சம்பவத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறும் அவர், ஊனா விவகாரம் பசுவதை சம்பந்தப்பட்டதல்ல, தலித்துகளை குறிவைக்கும் கேள்விக்கே இடமில்லை என்கிறார்.

மாநிலத்தில் இறைச்சிக்காக மாட்டை திருட்டுத்தனமாக கடத்திச் சென்று வெட்டும் சில சம்பவங்கள்தான் இந்த மசோதா கொண்டு வந்ததற்கு காரணம் என்றும், இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காகத்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

தனது கவலைகளுக்கான வேறு சில காரணங்களையும் ஜிக்னேஷ் பட்டியலிடுகிறார்.

பாரதீய ஜனதா கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காகவே அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்கிறார் அவர்.

அரசியல் சதுரங்கம்

தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்க பாரதீய ஜனதா கட்சி முயல்கிறது. அப்போது தான் இந்துக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நினைக்கும் பாரதீய ஜனதா கட்சி, இதுபோன்ற அரசியல் சதுரங்க விளையாட்டுகளை நடத்துகிறது என்கிறார் ஜிக்னேஷ்.

இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?

இந்த இரண்டு சமுதாயத்தினருக்கும் எதிராக இனிமேல் அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்று ஜிக்னேஷ் சொன்னால், அரசியல் சதுரங்கம் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் மறுக்கிறார்.

தேர்தலுக்கும், இந்த மசோதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர், "மாநிலத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும், ஏழைகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. யாரையும் இலக்கு வைப்பது பற்றி நாங்கள் யோசிக்ககூடவில்லை" என்று உறுதியாக சொல்கிறார்.

தலித் இயக்கத்தை நசுக்க சுலபமான பயனுள்ள ஆயுதமாக, இந்த மசோதாவை அரசு பயன்படுத்தும் என நம்புவதாக தலித் இயக்கத்தை சேர்ந்த கெளஷிக் பர்மார் கூறுகிறார்.

தங்கள் உரிமைகளுக்காக குரலை சிறிதளவு உயர்த்தினால் கூட, அரசு இந்த ஆயுதத்தை கையில் எடுத்து, தலித்துகளை தண்டிக்கும் என்று அச்சப்படுகிறார்.

இயக்கத்திற்கு இலக்கு

உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவளித்தால், அரசு இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யும் என்ற அச்சம் தலித் சமூகத்தினரிடையே ஏற்படும். ஆயுள் தண்டனை என்ற விஷயம் அவர்களை ஆயுளுக்கும் பயத்தில் வைத்திருக்கும்.

குஜராத் அரசாங்கம் தலித்துகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஓர் அட்டை உருவாக்குவதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளது.

மாநில அரசு, இந்த அட்டையின் அடிப்படையில், தலித்துகளை அடையாளம் கண்டு, வேண்டாதவர்களை தேர்ந்தெடுத்து, இந்தச் சட்டத்தின் கீழ் சிக்கவைக்கும் அல்லது பயமுறுத்தும்.

இந்தச் சட்டத்தால் தோல் தொழில் மிகவும் மோசமான பாதிப்படையும் என்ற அச்சம் நிலவுகிறது. தோல் தொழிலுக்கு மூலப்பொருட்களே கிடைக்காவிட்டால், தொழில் எவ்வாறு நடக்கும் என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது தான்.

`விலங்குகளை வெட்டுவது மட்டும்தான் முஸ்லிம்கள், மற்றதெல்லாம் ஹிந்துக்கள் வேலை'

இதன் தாக்கம் தோல் தொழிலை மிக மோசமாக பாதிக்கும் என்று தோலில் இருந்து காலணிகள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கும் வதோதராவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பொது மேலாளர் விஜய் ஆச்சார்யா கூறுகிறார்.

"மூலப் பொருட்கள் கிடைக்காவிட்டால், விலை உயரும், எங்களுக்கு சிக்கல் அதிகமாகும்" என்று அவர் கவலைப்படுகிறார்.

இயற்கையாக மரணமடையும் மாடுகளில் இருந்து தோல் கிடைக்கும் என்றாலும், அது தேவைகளை பூர்த்தி செய்யாது, தோல் தொழில் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று விஜய் ஆச்சார்யா கவலைப்படுகிறார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்