புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வழக்கில் வைகோவுக்குச் சிறை

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை MDMKPARTY
Image caption கோப்புப் படம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்ற பெயரில் 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வைகோ தடுக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் வருத்தம்

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், 13-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கான மனு ஒன்றைத் தாக்கல் செய்த வைகோ, நீதிபதி கோபிநாத் முன்பாக இன்று சரணடைந்தார். பல ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கை முடித்துவைக்கும்படி நீதிபதியிடம் வைகோ கோரினார்.

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் காரணமாக தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாகவும், காவல்துறையும் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வைகோ கூறினார்.

இதையடுத்து நீதிபதி, வைகோ தனது சொந்த ஜாமீனில் செல்லலாம் என்று கூறினார். ஆனால், அதனை ஏற்க வைகோ மறுத்துவிட்டார். வழக்கை முடித்துவைக்க வேண்டும்; இல்லாவிட்டால் தான் சிறைக்கே செல்வதாகக் கூறினார். இதையடுத்து வைகோவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோவுக்கு எதிர்ப்பு; கார் மீது தாக்குதல்

இதன் பிறகு வைகோ, புழல் சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்