சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகள்

  • 5 ஏப்ரல் 2017

இந்திய அரசின் மத்திய மனித வளத் துறை மேம்பாட்டு அமைச்சகம் பட்டியலிட்டிருக்கும் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.

படத்தின் காப்புரிமை SONIA NARANG
Image caption கோப்புப் படம்

சென்னையைச் சேர்ந்த லயோலா கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி நான்காவது இடத்தையும் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சென்னையில் உள்ள கல்லூரிகளில் எத்திராஜ் கல்லூரி (16வது இடம்), எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி (47வது இடம்), சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் கல்லூரி (59வது இடம்), மீனாட்சி மகளிர் கல்லூரி (59வது இடம்) ஆகிய பிற கல்லூரிகளும் இந்த 100 கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளன.

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்?

அதேபோல, நாட்டில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரிகளில் முதலிடத்தில் உள்ள 100 கல்லூரிகளில் 33 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள. இதில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஐம்பது சிறந்த நிர்வாகப் படிப்புகளுக்கான கல்லூரிகளில் 6 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. திருச்சியில் உள்ள இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐஐஎம்-டி) 13வது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டில் உள்ள சிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் நான்கில் ஒருபகுதி, அதாவது 100ல் 26 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆக்டோபஸை சாப்பிடும் டால்ஃபின்களின் தந்திரம்

"இதை ஒரு முழுமையான தரவரிசைப் பட்டியலாகக் கொள்ள முடியாது" என்கிறார் கல்விக்கான இதழ் ஒன்றின் ஆசிரியரான பொன். தனசேகரன். "இந்த தரவரிசைக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படுகின்றன. மிக நெருக்கமாக ஆராய்ந்தால், அதிக அளவில் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறும் கல்லூரிகள், பணம் நிறைந்த தனியார் கல்லூரிகள் ஆகியவை மட்டுமே இதில் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இவற்றைவிட சிறந்த மாநில அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன" என்கிறார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோவை கல்லூரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

இந்தப் பட்டியல் பலவற்றில் சிறந்த இடங்களைப் பிடித்திருக்கும் சென்னையின் அண்ணா பல்கலைக்கழகம் இரு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது குறித்தும் பட்டமளிப்பு விழாவே நடத்த முடியாமல் இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டுகிறார் தனசேகரன்.

"இப்படிப்பட்ட நிலையில், இதனை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறார் அவர்.

2016ஆம் ஆண்டிலிருந்து இம்மாதிரியான ஒரு தரவரிசைப் பட்டியலை மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிங் ஃப்ரேம்ஒர்க் வெளியிட்டுவருகிறது. இதற்கான தரவுகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகளே இந்த அமைப்புக்கு அளிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்