ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து சாட்சி சொல்ல யாருமில்லை: நீதிபதி ராஜேஸ்வரன் பேட்டி

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து சாட்சியமளிக்க சென்னையைத் தவிர்த்த பிற இடங்களில் இருந்து யாரும் முன்வரவில்லையென இதற்கான விசாரணை ஆணையத்தின் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி ராஜேஸ்வரன்
படக்குறிப்பு,

நீதிபதி ராஜேஸ்வரன்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றிய நிலையில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி போராட்டக்காரர்களிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, பல இடங்களில் காவல்துறை தடியடி நடத்தியது. சென்னையில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. சென்னையில் நடுக்குப்பம் மீன் சந்தை தீ வைத்து எரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டு வன்முறை (கோப்புப்படம்)

இந்தக் கலவரங்களில் பொதுச் சொத்துகளுக்கும் தனிச் சொத்துகளுக்கும் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்கவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணம் என்பது குறித்து அறியவும் காவல்துறை கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதா என்பதை விசாரணை செய்யவும் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்தக் கலவரம் தொடர்பான தகவல்களை அளிக்க விரும்புபவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் இது தொடர்பான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்யலாம் என ஆணையம் தெரிவித்தது.

ஆனால், இதுவரை 128 பிரமாணப் பத்திரங்கள் மட்டுமே வந்திருக்கின்றன என ஆணையத்தின் நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தெரிவித்தார்.

இவற்றில் 19 பிரமாணங்கள் காவல்துறைக்கு ஆதராவக இருப்பதாகவும் 14 பிரமாணங்கள் காவல்துறை மீது குற்றம்சாட்டி இருப்பதாகவும் ராஜேஸ்வரன் கூறினார்.

பட மூலாதாரம், Arun sankar/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரம் மாநிலம் முழுவதும் நடைபெற்றாலும் சென்னை தவிர்த்த பிற இடங்களில் இருந்து யாரும் சாட்சியமளிக்க இதுவரை முன்வரவில்லையன்று கூறிய ராஜேஸ்வரன், அதனால், சாட்சியமளிக்க விரும்புவர்கள் ஏப்ரல் 30க்குள் தங்கள் சாட்சியங்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற ஆணையம் ஒன்றே வழி என்று தெரிவித்த ராஜேஸ்வரன், ஊடங்களும் தங்கள் வசம் உள்ள வீடியோ காட்சிகளைத் தந்து உதவ வேண்டுமென்று தெரிவித்தார்.

காவல்துறையால் தாக்கப்பட்டதாகச் சொல்லும் ஊடகத்தினர் ஒருவர்கூட இங்கு புகார் அளிக்கவில்லையெனவும் ராஜேஸ்வரன் கூறினார்.

ஆணையம் விசாரணையைத் துவங்கி, நான்கு மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல்செய்யுமெனவும் ராஜேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்