சர்ச்சையைக் கிளப்பியது தென்னிந்தியர்கள் குறித்து பாஜக எம்.பி. தருண் விஜய் கருத்து

தென்னிந்தியர்கள் குறித்து, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜயின் கருத்துக்கள் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளன.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption தருண் விஜய் எம்.பி.

அண்மையில் தலைநகர் தில்லியின் புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவில் நைஜீரியர்கள் மீதான தாக்குதல் குறித்து அல் ஜஜீரா தொலைகாட்சியில் விவாதத்தில் பங்கேற்ற தருண் விஜய், "நாங்கள் இனவெறி கொண்டவர்களாக இருந்தால் தென்னிந்தியர்களுடன் எப்படி வசிப்போம்? உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்? தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என நம்மைச் சுற்றி கருப்பினத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்" என்று கூறினார்.

தருண் விஜயின் இந்தக் கருத்து, பொதுமக்களிடையே பரவலான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் தருண் விஜய் மீது விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

தமது கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோரியுள்ள தருண் விஜய், "நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நான் சொன்ன வார்த்தைகள் அபத்தமாகிவிட்டது, தவறான வெளிப்பாட்டிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தமது டிவிட்டர் செய்தியில் விளக்கமளித்துள்ளார்.

"பல்வேறு விதமான பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கலாசசாரங்களை பின்பற்றும் மக்களுடன் இணைந்து வாழும் இந்தியர்கள் நிறம் மற்றும் இனத்தின் அடிப்படையில் பாகுபாடோ, பாரபட்சமோ பார்ப்பதில்லை" என்ற கருத்தையே தான் சொல்ல வந்ததாக தருண் விஜய் விளக்கமளித்துள்ளார்.

தருண் விஜய் விளக்கம்

கருமைநிறம் கொண்ட கண்ணனை தெய்வமாக வணங்கும் இந்தியர்கள் எப்போதும் இனபேதத்தை பார்ப்பதில்லை என்றே தாம் சொன்னதாக அவர் விளக்கமளிக்கிறார்.

தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்து பேசும் தருண் விஜய், "என் கலாசாரத்திற்கு எதிராக என்னால் ஒருபோதும் செயல்பட முடியாது, அதை விட உயிர் துறப்பதே மேல் என்று கருதுகிறேன். என்னுடைய வார்த்தைகளை தவறாக பொருள் கொள்வதற்கு முன்னால் சற்று சிந்தித்துப் பேசுங்கள், நான் தென்னிந்தியாவை பழித்து பேசவில்லை. சீற்றத்தை வெளிப்படுத்தும் முன்பு, அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியை பாருங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

விவகாரம் குறித்து தருண் விஜய் விளக்கம் கொடுத்திருந்தாலும், சமூக ஊடகங்களில் சீற்றம் அடங்கவில்லை.

சத்வாஹனா என்பவர் தனது டிவிட்டர் செய்தியில், "தான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்பதையே தருண் விஜய் புரிந்துக் கொள்ளவில்லை. இனவெறி என்பது நம் சமூகத்தில் ஆழமாக வேரோடி கிடக்கிறது" என்று சொல்கிறார்.

தனது கோபத்தை வெளிப்படுத்தும் அமன்தீப், "தருண் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தென்னிந்தியாவில் அவரை நுழையவிடக்கூடாது" என்கிறார்.

லோன்ரேசர் தனது டிவிட்டர் பக்கத்தில், "தருண் விஜய்க்கு ஆதரவு கொடுப்போம். மத்திய அமைச்சரவையில் இருந்து தென்னிந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நல்ல வெண்மை நிறமாக உள்ளவர்களையே அமைச்சர்களாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கலாம்" என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்