ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

இந்தக் கூட்டத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை திங்கட்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

அதிமுகவில் சசிகலா தலைமையிலான அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. திமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் உள்பட பல கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் பெருமளவு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீடு, மேலும் சில அரசியல் கட்சிகளின் தலைவர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரிச்சோதனைகள் நடைபெற்றன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. அந்த ஆவணங்கள், வருமானவரித்துறையால் கசியவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவை பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதால், தேர்தலை ஒத்தைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இன்னொரு புறம், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கை, ராஜேஷ் லக்கானி சமர்ப்பித்த அறிக்கை ஆகியவை தேர்தல் ஆணையத்தின் முன் ஆய்வுக்கு உள்ளன.

இந்த நிலையில், தற்போது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதனடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா, புகார்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்