முதலில் தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள் பிறகு விவசாயிகளை பார்க்கலாம் : விஷாலை சாடும் தங்கர்பச்சான்

  • 9 ஏப்ரல் 2017

ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்திலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும் என்று நடிகர் விஷால் வெளியிட்ட அறிவிப்புக்கு அறிக்கை ஒன்றின் மூலம் தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.

Image caption தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள் பிறகு விவசாயிகளை பார்க்கலாம் : தங்கர்பச்சான்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு குண்டூசியை தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே விலை வைத்துக்கொள்கிறான் என்றும், ஆனால் உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் போன்றவர்கள் ஏதோ ஒரு விவசாயின் வங்கிக்கடனை மட்டும் அடைக்க பணம் கொடுப்பதும், விவசாயத்திற்கு உதவுவதற்காக நிதி திரட்டப்போகிறேன் என சொல்வதும், ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரப்போவதாக அறிவிப்பதும் இனி தொடரக்கூடாது என்றும், இது போன்ற காரியங்கள் விவசாயிகளுக்கு ஒரு விழுக்காடு கூட பயனிளிக்காது என்றும் தங்கர்பச்சான் சாடியுள்ளார்.

திரைப்படத்துறையினருக்கு உண்மையாகவே விவசாயிகளின் பிரச்சனை பற்றி உண்மையாக கவலை இருந்தால் ஒவ்வொரு கதாநாயக நடிகரும் ஆண்டுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி சமூக நலன், முன்னேற்றம் குறித்து சிந்தித்து ஒரு படமாவது நடித்திருப்பார்கள் என்றும், இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் அதற்கு மேலும் கூட கதாநாயகர்களாக இருக்கும் நடிகர்களும் ஒரே ஒரு படத்தில் கூட விவசாயிகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

முதலில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்ள திரைத்துறையினர் முயற்சிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தங்கர் பச்சான், நடிப்புக்கலையின் மூலம் அவர்களின் போராட்ட வாழ்க்கையான பிரச்சனைகளை உலகிற்கு திரைப்படங்கள் மூலம் தெரிய வைக்க முயற்சி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் என்று விவசாயிகளுக்காக விஷால் அறிவித்த திட்டம் குறித்து அறிக்கையில் குறிப்பிட்ட தங்கர் பச்சான், எத்தனை படங்களில் முதலீடு செய்த பணம் திரும்பி வந்து இருக்கிறது என்றும், முதலீடு செய்த பணம்கூட திரும்பி வராமல் செத்து மடியும் விவசாயிகளின் நிலைதான் இன்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக, நடிகர் சம்பளம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள தங்கர் பச்சான், நடிகர்களை ஒருங்கிணைத்து தயாரிப்பாளரே நஷ்டம் முழுவதையும் ஏற்கும் நிலையிலிருந்து விடுவிக்க லாபம்,நஷ்டம் இரண்டிலும் பங்கு வகிக்கும் புதிய நிபந்தனைகளை உருவாக்கி அழிந்து வரும் தயாரிப்பாளரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் என்றும், அதன் பிறகு விவசாயிகளுக்கு உதவுவது பற்றி நீங்கள் கவலைப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்