அமைச்சர்கள், முதலமைச்சர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ய ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் நீடிக்கும் அரசாங்கம் தொடரும் வரை "அதிகார துஷ்பிரயோகமும், பண விநியோகமும், பரிசுப் பொருட்கள் வழங்குவதும் சீராகப் போவதில்லை" என திமுகவின் செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook/M.K.Stalin

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில், வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில்" இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதலமைச்சர்ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொண்டு, இனி எந்தக் காலத்திலும் தமிழக இடைத் தேர்தலில் மட்டுமல்ல - பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் "தேர்தல் ஆணையம் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதை நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஒரு தற்காலிக முயற்சி என்றே எண்ண வேண்டியதிருக்கிறது.

ஜனநாயக முறைப்படி நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் இடைத் தேர்தலின் போது பண விநியோகத்திற்கும், தேர்தல் முறைகேடுகளுக்கும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாக இருந்த அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள், இவ்வளவு பறக்கும் படைகள் இருந்தும் பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்தது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றும் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.

அதே சமயம் டி.டி.வி.தினகரனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக களமிறங்கிய மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ரத்து குறித்து கருத்து வெளியிட்ட மதுசூதனன், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பினர் 89 கோடி ரூபாயை விநியோகம் செய்திருப்பது வெளிப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதே விவகாரம் குறித்து பேசிய முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் மட்டுமில்லாமல் திமுகவும் இந்த இதைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரினார்.

பணநாயகத்தை தோல்வி அடைய செய்யவே, இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடைபெறும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த நடவடிக்கை என்பது திட்டமிட்ட நாடகம் என கூறி கண்டனமும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்